செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

0 3097

சித்தப்பா சாவிற்காக கஞ்சா போதையில் கடைகளை அடைக்கச் சொல்லி கடைக்காரர்களை அரிவாளால் வெட்டியதுடன், பேக்கரியில் இருந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். 

அடுத்தவரின் இறப்பில் ஓசியில் சிக்கன் கிரேவியுடன் ரொட்டியும் ஆம்லெட்டும் சாப்பிட்டு விட்டு கடைக்காரரை வெட்டியதற்காக கைது செய்யப்பட்ட சாப்பாட்டு ரவுடி பிரவீன் குமார் தான் இவர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் உயிரிழந்த சமையல் மாஸ்டர் மயில்வேலின் இறுதி ஊர்வலத்தை ஒட்டி, அப்பகுதியில் கடைகளை அடைக்கச்சொல்லி, அவரது சகோதரரின் மகனும், ரவுடியுமான பாபா என்ற வினோத் மற்றும் அவரது நண்பர்கள் முகிந்தர், பிரவீன் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

கஞ்சா போதையில் அக்கும்பல் காஞ்சிபுரம் மாவட்டம் மாரிமங்கலம் பகுதியில் பெண்மணி ஒருவர் நடத்திவரும் பேக்கரியில் அத்துமீறலில் ஈடுபட்டது. அரிவாளால் பொருட்களை வெட்டி சூறையாடியதுடன், அப்பெண்ணை மிரட்டி ஆயிரம் ரூபாய் வசூல் செய்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியது.

அதேபோல், இருளஞ்சேரியில் உள்ள தாபாவிற்கு பைக்கில் சென்ற இவர்கள் ரொட்டி, சிக்கன் கிரேவி, எக் கீமா, ஆம்லெட், கலக்கி ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு பார்சலும் கட்ட சொல்லி உள்ளனர். பில் தொகையான 840 ரூபாயை தாபா உரிமையாளர் சுதன்ராஜ் கேட்ட போது, சித்தப்பா செத்து விட்டார் எங்களிடமே பணம் கேட்கிறாயா எனக் கேட்டு கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

வெறி அடங்காத மூவர் மீண்டும் நரசிங்கபுரத்தில் திறந்திருந்த கறிக்கடையை மூடுமாறு ரகளையில் ஈடுபட்டதுடன், கடை உரிமையாளர் வினோத்குமாரையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த வினோத்குமார், சுதன்ராஜ் உள்ளிட்ட ஐவர் போலீசாரிடம் புகார் அளித்தனர். கஞ்சா கும்பலுக்கு போலீசார் வீசிய வலையில் சிக்கிய பிரவீன் குமார் இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். குழுவின் தலைவன் பாபா என்ற வினோத்குமார், முகிந்தர் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கஞ்சா போதையில் வெறி ஏறி அடுத்தடுத்து 2 பேரை அரிவாளால் வெட்டிய இக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் கஞ்சா புழக்கத்தையும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments