ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

0 3338

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கணவரை கடத்தி விடுதி அறையில் சிறைவைத்து கந்துவட்டிக்கேட்டு ஆபாச மிரட்டல் விடுத்த கும்பலுக்கு பயந்து மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கந்து வட்டிக் கும்பலின் மிரட்டலால் பலியான பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் நடத்திய போராட்ட காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் இவர் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்தும் வேலை பார்த்து வருகிறார். வியாபாரம் நோக்கத்துக்காக அடிக்கடி அதிகனாக கந்து வட்டி வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வந்ததாக கூறப்படுகின்றது. பலமுறை பணம் வாங்கி அதிக வட்டியுடன் கடனை அடைத்து வந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு நாள் ஒன்றுக்கு 6000 ரூபாய் வட்டியாக கொடுத்துள்ளார் தினேஷ்குமார்
பணம் வர வேண்டிய இடங்களில் இருந்து பணம் வராததால் ஒரு சில தினங்கள் பணம் கொடுக்க தாமதமாகி உள்ளது. இதையடுத்து விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே கந்து வட்டி கும்பல் வழிமறித்து இரு சக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு அவரை, அருகில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

தினேஷ்குமார் தொலைபேசி எண்ணில் இருந்து அவரது மனைவி செல்விக்கு தொடர்பு கொண்ட கந்து வட்டிக்கும்பல் தலைவன், உனது கணவர் எங்களிடம் கடன் வாங்கி உள்ளார் அதனை உடனே தர வேண்டும் இல்லாவிட்டால் வீட்டில் வந்து அசிங்கப்படுத்தி விடுவேன் என அசிங்கமாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

15 ஆம் தேதி அன்று பணம் வர வேண்டி உள்ளது அந்த பணம் தருவதாக தினேஷ் குமாரின் மனைவி வாக்குறுதி அளித்ததன் பேரில் தினேஷ் குமாரை விடுவித்தனர். கந்து வட்டி கும்பலின் மிரட்டலால் மனமுடைந்த செல்வி தனது இரண்டு வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமாருக்கும், செல்விக்கும் திருமணம் ஆகி 3 வருட காலம் ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கந்துவட்டி கும்பல் மீது முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை என்று உறவினர்கள் ஆதங்கப்பட்டனர். கந்து வட்டி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருத்தாசலம் கோட்டாட்சியர் வாகனத்தை சிறை பிடித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்துவட்டிகேட்டு மிரட்டியவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதையடுத்து அதிக வட்டி வாங்கியதாக கூறி மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments