மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரில் மழை வெள்ளத்துடன் கலந்த கச்சா எண்ணையால் அப்பகுதி மக்களுக்கு கை கால்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வீடு, கார் எல்லாம் தார் எண்ணெய் போல ஒட்டிக் கொண்டதால் அவற்றை சரி செய்ய இயலாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி , ஆழப்படுத்த தவறியதால் தங்கள் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஆற்றின் வெள்ள நீர், சிபிசிஎல் கழிவு ஆயிலுடன் திருவொற்றியூர் ஜோதி நகருக்குள் புகுந்து விட்டதாக மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிலர் தங்கள் வீட்டுக்குள் உள்ள அனைத்து பொருட்களிலும், ஆயில் படிந்ததால் எல்லாம் வீணாகிவிட்டதாகவும், வாழ்வாதரத்தை இழந்து நடுத்தெருவில் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அரசின் வெள்ள அபாய எச்சரிக்கை தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் தாங்கள் இந்த இழப்புகளில் இருந்து மீண்டுவர 6 மாதங்கள் வரை ஆகும் என்று சிலர் வேதனை தெரிவித்தனர்
ஆயில் கலந்த வெள்ள நீரில் நடந்து சென்றதால் அரிப்பு இருப்பதாகவும், வீடுகளின் சுவற்றில் ஒட்டி உள்ள ஆயிலை அகற்ற முயன்றால் முடியவில்லை என்றும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்
வெள்ள நீரில் கச்சா எண்ணை கலந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்திய பசுமைதீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் , வருங்காலங்களில் இது போன்ற பேரிடர் ஏற்படாமல் இருக்க அரசுத்துறையினர் உறுதியான முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments