சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மிக்ஜாம் புயலின் போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
அதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 8 பேர் சிக்கியதாகவும் அதில் ஆறு பேர் உயிர் தப்பியதாகவும் இருவர் பள்ளத்தில் சிக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் எல் அண்ட் டி, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், என்.எல்.சி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ஈடுபட்டன.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பள்ளத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த நபர் நரேஷ் என்பதும், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்த கேஸ் பங்கில் பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளத்தில் வேறு யாரும் இருக்கிறார்களா எனத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Comments