சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
தனியார் தொலைக்காட்சியின் பிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் வீட்டிற்குள் இருக்கும் போதே, வீட்டின் வரவேற்பறையில் புகுந்த கொள்ளையன் , அங்கிருந்து ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போனை களவாடிச் சென்றான். அவனை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலக வில்லன்களை கூட தனது காமெடியான செய்கையால் நகைச்சுவை கதாபாத்திரபாக்கியவர் சின்னத்திரை காமெடி நடிகர் ஜெய சந்திரன்.
கலக்கபோவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஜெயசந்திரன் சென்னை கே.கே நகரில் இருந்து அண்மையில் வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்திற்கு குடும்பத்துடன் வாடகைக்கு குடி பெயர்ந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டின் முன்பக்க கதவை திறந்து போட்டு விட்டு படுக்கை அறையில் குடும்பத்தினர் உடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், வரவேற்பறையில் இருந்த ஜெயசந்திரனின் ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றுள்ளான். சத்தம் கேட்டு வந்த ஜெயசந்திரன் ஓடிச்சென்று அவனை பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரிடம் சிக்காமல் வீதியில் இறங்கி ஓடிய அவனை அவரால் விரட்டிச்சென்றும் பிடிக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஜெயசந்திரன் வட பழனி போலீசார் சம்பவ இடத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையனை தேடிவருகின்றனர்.
முதலில் அவர் இரவில் கதவை தாழிட மறந்து தூங்கும் போது கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் வீட்டில் அவர் இருக்கும் போதே கொள்ளையன் வீடு புகுந்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அடுக்குமாடி மட்டுமல்ல வீடுகளில் பகல் நேரமானாலும் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழிட்டால் இது போன்று வீடுதேடி வரும் வில்லன்களை தவிர்க்கலாம் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
Comments