என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

0 10805

காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா. அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியராக குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். நவம்பர் 15 ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்கள் இருவரும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாயமான ஆசிரியர்கள் குறித்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில வருடங்களாகவே நண்பர்களாக பழகி வந்த ஆசிரியர்கள் இருவரும், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியை தீபா உள்பட பலரிடம் பல லட்ச ரூபாய் பெற்ற வெங்கடேசன் அந்த பணத்தை திருச்சி தில்லைநகரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதில், தன்னிடமிருந்து வெங்கடேசன் பெற்ற 22 லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாகவே திருப்பி கேட்டு வந்துள்ளார் தீபா. இந்த நிலையில் தான் ஆசிரியர்கள் இருவரும் மாயமானது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே, தீபாவின் ரெனால்ட் க்விட் கார் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் இரண்டு நாட்களாக கேட்பாரற்று நிற்பதாக, தீபாவின் கணவர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் அளித்த தகவலின் பெயரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான தனிப்படையினர் அங்குச் சென்று காரில் சோதனை நடத்தினர்.

காரில் ரத்தக்கறை படிந்த நிலையில் ஒரு சுத்தியல், கத்தி, தீபாவின் தாலி, குண்டு, கொலுசு, உடை, ஏடிஎம் கார்டு மற்றும் வெங்கடேசனின் இரண்டு செல்போன்கள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர்களான ராஜாபிரபு, ஆனந்த் மற்றும் கோவையைச் சேர்ந்த மோகன் ஆகியோரிடம் ஆசிரியர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கில் ஆசிரியர் வெங்கடேசன் பிடிபட்டால் மட்டுமே பல முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் அவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments