சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

0 3384

சென்னை குரோம்பேட்டை லாட்ஜில் ரூம் எடுத்து ஒன்றாக தங்கியிருந்த நர்ஸிங் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து அதனை 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' வைத்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

பாதி வழித்த மண்டையோடு ஒரு போஸ், கொண்டையோடு ஒரு போஸ் என விதவிதமான ஹேர் ஸ்டைல்களோடு ஸ்டேட்டஸ் வைப்பதோடு நிறுத்தாமல், தான் செய்த கொலையையும் ஸ்டேட்டஸ் வைத்து போலீஸில் சிக்கிய ஆசிக் தான் இவர்.

கேரளாவைச் சேர்ந்த 20 வயதான பவுசியா சென்னை குரோம்பேட்டையில் தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வந்தார். தன்னை பார்ப்பதற்காக காதலன் ஆசிக் கேரளாவில் இருந்து வந்திருப்பதாகவும் இருவரும் நியூ குரோம் ரெசிடென்சியில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் நெருங்கிய தோழிகளிடம் மட்டும் கூறி விட்டு சென்ற பவுசியா காதலனுடன் தங்கியுள்ளார்.

மூன்று நாட்களாக பவுசியா கல்லூரிக்கு வராத நிலையில், காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக ஆசிக் வைத்திருந்த செல்ஃபோன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸை பார்த்து பதறிய பவுசியாவின் தோழிகள் உடனடியாக குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குரோம் ரெசிடென்சிக்கு விரைந்த போலீஸார் அறை எண் 201 இல் பவுசியா சடலமாக கிடப்பதைக் கண்டதும் மாணவிகள் தெரிவித்த தகவல் உண்மை தான் என்பதை தெரிந்துக் கொண்டனர். உடனடியாக, விசாரணையை துவங்கிய போலீஸார், பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆசிக்கை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையின்போது, பவுசியாவும் தானும் 16 வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டதோடு குழந்தை ஒன்றும் பெற்றெடுத்ததாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தான் ஆசிக். இந்த குற்றத்திற்காக ஏற்கனவே கேரள போலீஸார் ஆசிக் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்திருந்ததும் தெரிய வந்தது.

தனது குழந்தை கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து வரும் நிலையில், சென்னையில் இருக்கும் காதலி பவுசியாவை பார்க்க வந்துள்ளான் ஆசிக்.

3 நாட்களாக ஓட்டலில் தங்கியிருந்த நிலையில், ஆசிக்கிற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து பவுசியா சண்டையிட்டதாகவும், ஒருகட்டத்தில் பவுசியாவின் கழுத்தை பிடித்து நெரித்ததில் அவர் உயிரிழந்து விட்டதால் சடலத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான் ஆசிக். இதனையடுத்து, போலீசார் ஆசிக்கை கைது செய்தனர்

பள்ளியில் படிக்கும் வயதில் காதலில் விழுந்தால் அது என்ன மாதிரியான விபரீத நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments