முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

0 2147
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சரை அழைத்துப் பேசி தீர்வு காணுமாறும் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு, அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி, ஒரு மசோதா தொடர்பாக ஆளுநருக்கு முன் 3 தேர்வுகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒன்று, மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாம், அல்லது அதை நிலுவையில் வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறியது. இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்த பின், 4-வதாக ஒரு தேர்வை ஆளுநர் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தை பொருத்த வரை முதலிலேயே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்துவிட்டதால், தற்போது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தது.

குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பதவிக்கு வருவதால் அவரது அதிகார வரம்பு பெரியது என்று சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், ஆளுநரை பொருத்தவரை அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர் என்பதால் மூன்று தேர்வுகளில் ஒன்று மட்டுமே அவருக்கு உண்டு என்று கூறியது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றினால், அதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்கக் கூடாது என்று அரசியல் சாசன சட்டத்தின் 200-வது பிரிவு குறிப்பிடுவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல், தமிழகத்தில் நிலவும் இக்கட்டான நிலையை தீர்க்க ஆளுநர் உறுதி செய்யுமாறு யோசனை தெரிவித்த தலைமை நீதிபதி, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நிறை விஷயங்களுக்கு தீர்வு காண வேண்டிய இருப்பதாக கூறினார். ஆளுநரும் முதலமைச்சரும் அமர்ந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று யோசனை தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments