கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
தொடர்மழை காரணமாக சென்னை மாம்பலம், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இரவோடு இரவாக மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொளத்தூர் பகுதியில் சில மணி நேரத்தில் இரவு 15 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் தேங்கிய மழைநீர் பெரும்பாலான இடங்களில் அகற்றப்பட்டது. அஞ்சுகம் நகர் பகுதி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
அதிகாலை பெய்த மழையால், தியாகராயநகர், மேற்கு மாம்பலத்தின் பெரும்பாலான சாலைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்ட நிலையில், லட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் , சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மழைநீரில் இடறி கீழே விழுந்தார்.
முத்துரங்கன் சாலையில் தேங்கிய மழை நீரில் இரு சக்காரவாகன ஓட்டிகள் இருவர் தடுமாறி விழுந்த நிலையில் அவர்களது செல்போன்கள் தண்ணீரீல் விழுந்து சேதம் அடைந்தது
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள டேமொலஸ் தெருவிற்குள் மழை நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகரில் குடியிருப்புகளுக்கு புகுந்த மழை நீரால் அப்பகுதிவாசிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
பெய்த கனமழையால், மாங்காடு ஓம்சக்தி நகர் மற்றும் முடிச்சூர் தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
மடிப்பாக்கத்தில் மூவரசம்பட்டு ஏரி நிரம்பி ஊருக்குள் நீர் புகுந்ததால் பிருந்தாவன் நகர் குடியிருப்புகளில் வெள்ள நீர் பாய்ந்தோடியது.
இதனால் அந்தப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அடையாற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
சென்னை யானைக்கவுனி பகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும், மேயர் பிரியாவும் வெள்ளம் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தனர்.
அதேபோல், சென்னை சைதாபேட்டையின் சில தெருக்களில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தை அகற்றும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
Comments