சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?

0 2303

சென்னை மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அருகே சீரமைக்கப்படாத சாலையில் நிலை தடுமாறிய அனல் மின் நிலைய ஊழியரை கண்டெய்னர் லாரி ஒன்று தட்டிகீழே சாய்த்த நிலையில், சுதாரித்து எழுவதற்குள்ளாக பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சீர்கெட்ட சாலையால் உயிர்பலியான சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சீர்கெட்ட சாலையால் லாரியின் சக்கரத்தில் சிக்கி தனது சகோதரர் பலியானதாக , பெண் ஒருவர் கண்ணீர் மல்க கதரும் காட்சிகள் தான் இவை..!

மீஞ்சூரில் இருந்து எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலை மழை நீர் தேங்கி குண்டு குழியுமாக காட்சி அளிப்பதால், ஏராளமான வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர்.

இந்த சாலையில் இரு புறமும் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்வதால் குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகள் பயன் படுத்த இயலாத அளவிற்கு மோசமாக உள்ளது

அதே போல கடந்த ஆண்டே மணலி விரைவுச்சாலையில் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு திட்டம் வகுக்கப்பட்டும், கொண்டக்கரை சந்திப்பில் முழுமையாக கான்கிரீட் போடாமல் பாதி பாதியாக அம்போவென விடப்பட்டதால், சீர்கெட்டு காணப்படும் சாலையால் லாரிக்குள் தடுமாறி விழுந்து அநியாயமாக ஒரு உயிர் பறிபோய் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சின்ன ஈச்சங்குழியை சேர்ந்த வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளர் தாமோதரன். கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்த அவர் எப்போதும் மாலை 5 மணிக்கு பணி முடிந்து 6 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடும் நிலையில், சம்பவத்த்ன்று வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு வருவதற்கு காலதாமதமானது.

இரவு பத்தரை மணி அளவில் வீட்டிற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக உள்ள கொண்டக்கரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாமோதரன் அரையும் குறையுமாக காண்கிரீட் போடப்படாத சாலையில் நிலை தடுமாறிய போது, லாரி ஒன்று இடித்ததாக கூறப்படுகிறது . அதில் நிலை தடுமாறி விழுந்த தாமோதரன் சுதாரித்து எழுந்து நிற்பதற்குள் வேறு ஒரு டிப்பர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்துக் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான தாமோதரனுக்கு கோமதி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். திமுக பிரமுகரான தாமோதரன் தரமற்ற சாலையால் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

மணலி சுங்க சாலை சரியான முறையில் பராமரிக்கபடாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மழைக்கே சாலைகள் பொத்தலான நிலையில் சந்திப்பு பகுதியில் மட்டும் கான்கிரீட் பணிகளை மேற்கொண்ட சுங்கசாலை ஒப்பந்தராரர்கள், சாலையை முழுமையாக சீரமைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், சுங்கசாவடி நிர்வாகம் உயிரிழந்த வாகன ஓட்டியின் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments