அடித்துக் கொல்லப்பட்ட வெண்கலத் திருடன்.. சிக்கலில் 2 கிராம மக்கள்..!
வெண்கலப் பொருட்களை மட்டும் குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த திருடன் ஒருவனை அடித்தே கொன்றதாக ஊத்தங்கரை அருகே உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊனாம்பாளையம் கிராமத்தில் உள்ளது, அம்மன் கோயில் ஒன்று. கடந்த ஞாயிறன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு மணி, பூஜை தட்டு போன்ற வெண்கல பொருட்கள் திருடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்து ஊர்களில் வெண்கல சாமான் திருட்டு என்றால், அது பக்கத்து ஊரான சின்னகணக்கம்பட்டியை சேர்ந்த சொட்டை சேகர் என்ற 70 வயதுக்காரராகத் தான் இருப்பார் என்று கருதிய ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஊர் நாட்டாமை தலைமையில் கூட்டம் நடத்தி சொட்டை சேகரை அழைத்து விசாரித்தனர். அப்போது, திருட்டை ஒப்புக் கொண்ட சொட்டை சேகர், திருடிய பொருட்களை அருகிலுள்ள புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் என்பவர் வீட்டில் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனே டாடா ஏஸ் வாகனம் ஒன்றில் சேகரை ஏற்றிக் கொண்டு ஊனாம்பாளையம் கிராமத்துக் காரர்கள் 12 பேர் புளியாண்டப்பட்டிக்குச் சென்று அருணாச்சலம் வீட்டில் விசாரித்தனர்.
அருணாச்சலம் குடும்பத்தினரோ, தங்களுக்கு தேவையில்லாமல் திருட்டு பட்டம் கட்டுவதாகக் கூறி சொட்டை சேகரை கட்டையில் அடித்துத் தாக்கினர். தங்கள் வீட்டின் அருகில் உள்ள வயலுக்குள் சொட்டை சேகர் வீசி சென்றதாகக் கூறி பை ஒன்றையும் கொடுத்தனர்.
பையில் இருந்த கோயில் பொருட்களை கைப்பற்றிய ஊனாம்பாளையத்துக்காரர்கள், மேலும் சில பொருட்களை காணவில்லை என்றும் அவை எங்கே என்றும் கேட்டனர். அதையும் அருணாச்சலம் வீட்டில் தான் கொடுத்து வைத்ததாக சொட்டை சேகர் கூறியதும், அருணாச்சலத்தின் வீட்டுப் பெண்கள் கையில் கட்டைகளை எடுத்துக் கொண்டு சேகரை சரமாரியாக தாக்கினர்.
அடி வாங்கிய ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த சேகரை மீட்டு ஊனாம்பாளையத்துக்காரர்கள் அவரது வீட்டில் விட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் சொட்டை சேகர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது கணவரை அடித்தே கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேகரின் மனைவி சிவகாமி கூறியுள்ளார்.
தகவலறிந்த ஊத்தங்கரை போலீஸார் சொட்டை சேகரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். ஊனாம்பாளையம் கிராம நாட்டாமை உள்ளிட்ட 7 பேர் மற்றும் அருணாச்சலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.
Comments