Low battery ஆன போதே சொன்னோம்.. யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.. வெண்டிலேட்டர் மரண பின்னணி..!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட சிவனாகரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அமராவதி. 48 வயதான இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அமராவதிக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 26 ந்தேதி மாலை 3:50 மணிக்கு ஏற்பட்ட மின் தடையால் வெண்டிலேட்டர் செயல் இழந்து 4:05 மணிக்கு அமராவதி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் தான் அமராவதி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி அவரது மகன் மணிகண்டன் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
அதில் low battery ஆக இருக்கும் போதே அங்கிருந்த செவிலியர் மற்றும் மருத்துவரிடம் உதவி கோரினோம் ஆனால் எவரும் உதவிக்கு வராமல் தங்களை தரக்குறைவாக திட்டியதாகவும். தனது தாயின் சாவுக்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் கூறுகையில் அமராவதிக்கு காச நோய் காரணமாக நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை தான் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மின்தடை ஏற்பட்டு ஏழு நிமிடத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அமராவதியுடன் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் வைக்கப்பட்ட நான்கு நபர்கள் நலமுடன் இருப்பதாகவும் இவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்.
Comments