திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் தடையால் வெண்ட்டிலேட்டர் செயலிழந்து பெண் இறந்ததாக புகார்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 48 வயது பெண் ஒருவர், மின் தடை ஏற்பட்டதால் வெண்ட்டிலேட்டர் கருவி செயலிழந்து இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த அமராவதி என்ற அப்பெண், சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர சிகிச்சை பிரிவில் வெண்ட்டிலேட்டர் கருவி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மறுநாள் ஞாயிறன்று மாலை 3-50 மணி வாக்கில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் வெண்ட்டிலேட்டர் கருவி லோ-பேட்டரி என்ற எச்சரிக்கையை காட்டியதாகவும் அமராவதியின் மகன் கூறியுள்ளார்.
அது பற்றி மருத்துவர்கள், செவிலியர்களிடம் தாங்கள் தெரிவித்த போதிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மாலை 4-05 மணிக்கு அமராவதி இறந்து விட்டதாக அவரது மகன் மருத்துவமனை டீனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமராவதி, காச நோயால் நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக திருவாரூர் அரசு மருத்துவமனை டீன் ஜோசஃப் ராஜ் கூறியுள்ளார்.
மின்தடை ஏற்பட்டு ஏழே நிமிடத்தில் ஜெனரேட்டர் மூலம் மீண்டும் மின் இணைப்பு தரப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அமராவதியுடன் அனுமதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Comments