கார் பேனட்டில் கட்டுகட்டாக பதுக்கிய பணத்தில் பற்றிய தீ! சூட்டோடு அள்ளிய மக்கள்..!! ஓட்டுக்காக கடத்திய பணத்திற்கு வேட்டா?

0 2517

தெலங்கானாவில் காரின் பேனட்டுக்குள் கட்டு கட்டாக அடுக்கி பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பணம் நடுவழியில் எஞ்சின் சூடு காரணமாக பற்றி எரிந்தது. இதை அணைப்பதற்காக நிறுத்திய போது, அவ்வழியாக சென்றவர்கள் அந்த பணத்தை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த எம்.ஜி. ஹெக்டர் காரின் பேனட்டில் இருந்து திடீரென வெண் புகை கிளம்பியது. காரை நிறுத்தி விட்டு இறங்கிய 2 இளைஞர்கள் பேனட் மீது தண்ணீர் ஊற்றி புகையை மட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது அருகே உள்ள பொலிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சிலர், பேனட்டுக்கு மேலே தண்ணீரை ஊற்றினால் எப்படி, உள்ளே ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறி, பெரிய கேனில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர். தண்ணீர் ஊற்றுவதற்காக பேனட்டை திறந்த போது, உள்ளே கட்டு கட்டாக 500 ரூபாய் பண்டல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

எரிந்திருந்தவை போக, எஞ்சிய பணக்கட்டுகளை பொலிகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், இந்த வழியாகச் சென்ற சிலரும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. கூட்டம் குழுமியதால், காரில் வந்த இளைஞர்களால் அதனை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் வருவதைப் பார்த்ததும் காரில் வந்த இளைஞர்கள் காரை விட்டுவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றனர். காரை முழுவதுமாக சோதனை செய்த போலீசார், பாதி எரிந்த நிலையில் கிடைத்த தொகை இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநில சட்டமன்றத்திற்கு வரும் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள தெலங்கானா போலீசார், பறக்கும்படையினர் வழக்கமாக பேனட்டை திறந்து சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால் பணத்தை கட்டு கட்டாக அடுக்கி எஞ்சின் அருகே வைத்து கொண்டு வந்திருக்கலாம் என்றும், வண்டி ஓடிய போது என்ஜினில் ஏற்பட்ட சூட்டால் பணக்கட்டுகள் பற்றி எரிந்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். கேட்பாரின்றி விட்டுச் செல்லப்பட்ட எம்.ஜி. ஹெக்டர் காரை பறிமுதல் செய்துள்ள தெலங்கானா போலீஸார், பணத்தை கடத்தியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments