போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனுக்கு ராமஜெயம் கொலையில் தொடர்பா? நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

0 3639

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறப்பு புலானாய்வுக்குழு போலீசாரால் அழைத்து விசாரிக்கப்பட்ட கொம்பன் ஜெகன் என்ற ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 கொலை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன். திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல், உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலைவையில் உள்ளன.

திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சனமங்கலம் காட்டுப் பகுதியில் புதன்கிழமை அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது ஜெகன் அரிவாளால் தாக்கியதில் எஸ்ஐ மோகன் கையில் காயம் ஏற்பட்டதாகவும், தங்களை தற்காத்துக் கொள்ள இரண்டு ரவுண்டுகள் சுட்டதில் மார்பு மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட ஜெகனின் உடலை மீட்டு திருச்சி லால்குடி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டு உடற்கூறு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. காயமடைந்த எஸ்ஐ வினோத் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் நிலா, பொன்னி என்ற இரு மோப்ப நாய்கள் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த டிஐஜி பகலவன், ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்று பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதை பார்வையிட்டார்.

30 வயதான ஜெகன் டிப்ளமோ இன் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். படிக்கும் போதே தனது 17வது வயதில் அடிதடி வழக்கு ஒன்றில் சிக்கி ரவுடி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெகன் 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திருச்சி, பெரம்பலூர், தஞ்சை,நாகை, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக
இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட போது அவர்கள் அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் திருச்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை மிரட்டி ஜெகன் ஒரு கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டு நடந்த திருச்சி ராமஜெயம் கொலைக்கும் ரவுடியான ஜெகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஜெகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ஜெகன் விடுவிக்கப்பட்டாலும் ஜெகனுடன் தொடர்பில் இருந்த சிலர் இன்னும் போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments