உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு யோகா செய்யவும் தூங்கவும் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தல்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் பத்துநாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் யோகா செய்யவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக நேற்று சுரங்கத்தினுள் பைப் மூலம் கேமரா செலுத்தப்பட்டு தொழிலாளர்கள் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து குழாய் மூலமாகவே அவர்களுக்கு அதிக காரம் எண்ணெய் இல்லாத சைவ உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. செல்போன் சார்ஜர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தூக்கம் மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தூங்குவதில் சிரமம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாட்களில் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க சுரங்கப்பாதையின் மேல் பகுதி வழியே துளையிடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
துளையிட வேண்டிய பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், துளையிடும் கருவிகளை சுரங்கப் பகுதிக்குக் கொண்டுசெல்ல புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இரு நாள்களுக்கு முன்பு, பாறை இடுபாடுகள் இடையே பொறுத்தப்பட்ட ஆறு அங்குல குழாய் வழியே செலுத்தப்பட்ட கேமராவில் தொழிலாளர்கள் படம் பிடிக்கப்பட்டனர்.
அவர்களுடன் மீட்புப் குழுவினரும், குடும்பத்தினரும் பேசினர். உள்ளே சிக்கியிருப்பவர்களுக்குக் குழாய் வழியே உணவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடியை தொடர்புகொண்டு விளக்கியதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
மீட்கப்படும் தொழிலாளர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Comments