மச்சி வேணாண்டா... கேட்காமல் குதித்த என்ஜினீயர் அணையில் மூழ்கிய பரிதாபம்..! உதகை நீச்சல் விபரீத காட்சிகள்
நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் கூட உதகை அணையில் குளிப்பது ஆபத்தானது என்று எச்சரித்தும், கேட்காமல் உள்ளே குதித்த கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நீரில் மூழ்கி உயிரிழந்த திகிலூட்டும் காணொளி வெளியாகி உள்ளது.
உதகை அணையில் எச்சரிக்கையை மீறி குளித்து உயிரை பறிகொடுத்த காட்சிகள் தான் இவை..!
நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் ராம்குமார். 28 வயதான இவர் கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார்.
உதகையை அடுத்த அத்திகல் பகுதியில் உள்ள இவருடைய நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை ராம்குமார் தனது நண்பர்கள் சுமார் 10 பேருடன் சென்றிருந்தார்.
திருமணத்திற்கு அத்திகல் செல்லும் முன்னர் உதகை - கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் அணையின் பின்பக்கம் தண்ணீர் சேரும் இடத்தில், நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்றார்.
அப்போது திடீரென்று தண்ணீரில் குதித்த ராம்குமார் நீந்தி சென்று குளித்து மகிழ்ந்தார். அவரை ஆபத்தான பகுதி குளிக்க வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் எச்சரித்தனர்.
கேட்காமல் அணையில் நீச்சல் அடித்த ராம்குமார் ஒரு கட்டத்தில் கரைக்கு திரும்பலாம் என்று நினைத்தபோது அவரால் வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு சத்தம் போட்டபோது அவர்களுடைய நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை.
இதனால் சுமார் 50 அடி ஆழமான பகுதியில் ராம்குமார், தனது நண்பர்களின் கண்முன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுமந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம், நீலகிரி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் அரி பரந்தாமன், நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் மூழ்கி இறந்த ராம்குமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் கூறுகையில், நீரில் மூழ்கி இறந்த ராம்குமாருக்கு நன்றாக நீச்சல் தெரிந்துள்ளது. ஆனால் சமவெளி பகுதியில் இருப்பது போல் நீலகிரியில் இருக்காது, இங்கு தண்ணீரின் அடர்த்தி அதிகம், குளிர்ச்சியும் அதிகம் என்பதால் அவரால் நீந்தி கரைக்கு வர முடியவில்லை, இதனால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார், எனவே நீலகிரியில் உள்ள நீர் நிலைகளுக்குள் குளிப்பதற்காக செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தார்.
Comments