மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றிய தமிழக பேரவை! அனல் பறந்த விவாதங்கள்!!
ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு கூடியதும் ஆன்மீகவாதி பங்காரு அடிகளார், தியாகி சங்கரய்யா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அனுமதிக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதன் மீது உரையாற்றிய முதலமைச்சர், பெரும்பான்மைமிக்க அரசால் மக்கள் நலன் கருதி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பி இருப்பது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அவர் தெரிவித்தார்.
அரசின் கொள்கைகள் குறித்து பொது வெளியில் விவாதம் செய்வது ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல என்று கூறிய முதலமைச்சர், ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டியதாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கி இருப்பது மரபு என்றும் தெரிவித்தார்.
கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க.வின் சதன் திருமலைக் குமார், சி.பி.ஐ.யின் தளி ராமச்சந்திரன், சி.பி.எம்.மின் நாகை மாலி ஆகியோரைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது உரையாற்றிய பா.ஜ.க. உறுப்பினர் நயினார் நாகேந்திரன், துணை வேந்தர்கள் ஆளுநர் மூலமாக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியதை சுட்டிக்காட்டினார். ஆளுநருக்கு எதிராக மாநில அரசு கூர்மையான போக்கை கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின் பேசிய பா.ம.க.வின் ஜி.கே. மணி, தமிழக மக்களின் நலனுக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தால் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா என்ற கேள்வி எழுவதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரைக்குப் பின் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மஞ்சள் வேட்டிக் கட்டி இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு உறுப்பினர்கள் 3 பேர் வெளிநடப்பில் பங்கேற்காமல் அவையில் தொடர்ந்து அமர்ந்திருந்தனர். அதன் பின் முதலமைச்சரின் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிறப்புக் கூட்டம் நிறைவடைந்து பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Comments