அரசு ஏ.சி பேருந்தில் பயணிகளுக்கு போலி டிக்கெட் வழங்கிய நடத்துனர்... அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் சிக்கினார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு ஏ.சி பேருந்தில், பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நடத்துநரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் கையும் களவுமாக சிக்கினார்.
சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பேருந்து வடலூர் பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது பயணிகள் காட்டிய டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்ததையடுத்து, நடத்துநர் நேருவிடம் விசாரித்தபோது அவர் திரு திருவென விழித்துள்ளார், அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்து போலி டிக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், பேருந்தை எங்கும் நிறுத்தாமல் சிதம்பரத்திற்கு கொண்டு வந்து அங்கு பயணிகளை இறக்கி விட்ட பிறகு, பேருந்து மீண்டும் சேலம் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நூதன முறையில் கொள்ளையடித்த நடத்துனர் நேரு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சத்தியமூர்த்தி ஆகியோர் சேலம் பணிமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments