இலங்கையிலிருந்து... சென்னை காவல் துறைக்கு வந்த கடத்தல் புகார்... 12 மணி நேரத்தில் தொழிலதிபரை மீட்ட காவல் துறை

0 1515

இலங்கை தொழிலதிபரான தனது கணவரை சென்னையில் கடத்தி வைத்து வீடியோ காலில் வந்து பணம் கேட்டு மிரட்டுவதாக இலங்கையில் இருந்து பெண் ஒருவர் சென்னை காவல் துறையை தொடர்பு கொண்டு அளித்த புகார் தொடர்பாக 12 மணி நேரத்தில் தொழிலதிபரை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கையை கொழும்புவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முகமது ஷாம், இவர் வெளிநாடுகளுக்கு கொட்டை பாக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்த 10-ம் தேதி தொழில் சம்பந்தமாக இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஷாம், சென்னை மண்ணடி பகுதியில் தங்கியிருந்த நிலையில், அவர் கடத்தப்பட்டதாகவும், கடத்தல் கும்பல் ஒன்று தனது கணவரை கட்டி வைத்து வீடியோ கால் மூலம் காண்பித்து 15 லட்சம் கேட்டு மிரட்டுவதாக, இலங்கையில் இருந்து ஷாமின் மனைவியும், மகளும் சென்னை காவல் துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். மண்ணடியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தொழிலதிபர் ஷாம் கடந்த 11ஆம் தேதியே அறையை காலி செய்து விட்டு தனியாக நடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தொழிலதிபரின் மனைவிக்கு கடத்தல் கும்பல் செய்த வீடியோ காலின் போது, ஒரு லாட்ஜிக்கு முன்புறமாக நின்று மிரட்டி பேசியதால், அந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ், கூகுள் எர்த் செயலியில் இமேஜ் சர்ச் மூலம் பதிவிட்டு லாட்ஜின் பெயர், முகவரியை எடுத்து கே.கே.நகரில் ஒரு லாட்ஜில் வைத்து தொழிலதிபர் முகமது ஷியாமை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த தினேஷ், வேல்முருகன் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் படி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரியாஸூதீன் அக்ஷர், பெண் தொழிலதிபர் சித்ரா ஆகிய இருவரையும் அண்ணா நகரில் வைத்து கைது செய்தனர்.

கடத்தல் கும்பலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்த போது தொழிலதிபர் ஷாம் கடன் வாங்கச் சென்று தாமாகவே கடத்தல் கும்பலிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பெண் உலர் பழங்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தொழிலதிபர் ஷாம் அறிமுகமாகி ஏற்றுமதி தொழில் செய்து வந்த நிலையில், சித்ராவிற்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் நிலுவை தொகையை கொடுக்கமால் ஷாம் தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது தூத்துகுடி துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய தனது கொட்டை பாக்கு கண்டெய்னைரை மீட்க, முகமது ஷாமிற்கு பணம் தேவைப்பட்டதால், தனது நண்பர் மூலம் சென்னை அண்ணா நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரின் பழக்கம் ஏற்பட்டு அவர் பணம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, முகமது ரியாசிடம் பணம் வாங்க சென்ற போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ரியாசின் பெண் தொழியான சித்ராவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கனவே 5 லட்சம் ஏமாற்றிவிட்டு தன்னிடமே மீண்டும் பணம் கேட்க வந்த ஷாமை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சித்ரா, தனது ஆண் நண்பர் ரியாஸ் உதவியுடன் அடியாட்களை வைத்து ஷாமை கடத்திச் சென்று அடைத்து வைத்ததும், அந்த 5 லட்சத்திற்கு வட்டியுடன் 15 லட்சமாக தரவேண்டும் என குடும்பத்தினரை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments