உப்பு மேல முட்டிக்கால்... காதலில் விழுந்த மகளுக்கு தாய் கொடுத்த தண்டனை... கூண்டை விட்டுப் பறந்த கிளி...
அடியாட்கள் கும்பல் ஒன்று வீடு புகுந்து மகளை கடத்திச் சென்று விட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரளிக்க, தன்னை யாரும் கடத்தவில்லை தாயின் கொடுமை தாங்க முடியாமல் காதலனை தேடிச் சென்று விட்டதாக மகள் டுவிஸ்ட் அடிக்க புகாரளித்த பெண்ணை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு இரவு நேரத்தில் சென்ற சுனிதா என்ற பெண், தனது வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று மகளை கடத்திச் சென்று விட்டதாக பரபரப்பு புகார் அளித்தார். எத்தனை பேர் வந்தார்கள்..? எப்படி கடத்தினார்கள்..? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர் போலீஸார்.
கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் தனது மகள் அமர்ஷியாவை அதேப்பகுதியைச் சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் காதலித்து வருவதாகவும் அவர் தான் அடியாட்களை அனுப்பி கடத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்தார் சுனிதா.
போலீஸார், டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற போது அங்கிருந்தார் அமர்ஷியா. சுனிதா கூறியது உண்மை தானோ என நினைத்து போலீஸார் விசாரணை நடத்திய போது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தாயாரின் கொடுமை தாங்க முடியாமல் காதலன் வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார் 19 வயதான அமர்ஷியா.
டிப்ளமோ பட்டதாரியான டேனியல் ஆகாஷை தான் காதலித்து வருவது தெரிந்ததும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னை தனியறையில் தாயார் அடைத்து வைத்ததாக தெரிவித்தார் அமர்ஷியா. தரையில் கல் உப்பை பரப்பி அதன் மீது முட்டி போட வைத்து அடித்து துன்புறுத்தியதால், அங்கிருந்து தப்பித்து காதலன் வீட்டில் தஞ்சமடைந்ததாக தெரிவித்தார் அமர்ஷியா.
தங்கள் வீட்டிற்கு அமர்ஷியா வந்திருப்பது குறித்து சுனிதாவிற்கு செல்போன் மூலமாக டேனியல் தகவல் தெரிவித்ததும் அங்கு சென்றும் மகளை தாய் தாக்கியதாக கூறப்படுகிறது.
பொய் புகாரளித்த சுனிதாவை கண்டித்த போலீஸார், காதலர்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே அனுப்ப முடியும் என இருதரப்பினருக்கும் விளக்கமும் அளித்தனர் போலீஸார். உடனடியாக இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென காதல்ஜோடிக்கும் அறிவுறுத்தினர் போலீஸார். காதலனுடன் மகள் சென்றதால் காவல்நிலையத்திலிருந்து சோகத்துடன் வெளியேறினார் பெற்றெடுத்த தாய்.
Comments