மனுசன்யா..! ஊழியர்களின் தவறுக்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்ரீசக்தி சினிமாஸ் திருப்பூர் சுப்பிரமணியம்..! பின்னணியில் லியோ விவகாரம் உள்ளதா ?
சல்மான் கானின் டைகர் த்ரீ திரைப்படத்தை தீபாவளியன்று 7 மணிக்கு திரையிட்ட புகாருக்குள்ளான நிலையில் , திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திருப்பூர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
திரையரங்கு கட்டணம்... திரைப்பட வசூல் நிலவரம் .. நடிகர்களின் சம்பளம்.. என திரையுலகம் தொடர்பான தகவல்களை ஒளிவு மறைவின்றி மீடியாக்களிடம் பகிர்ந்து கொள்ளும் தைரியசாலி திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்..!
திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தின், ஸ்ரீசக்தி சினிமாஸ் திரையரங்கத்தில், தீபாவளி அன்று காலை 7 மணிக்கே படங்களை திரையிட்டது விதிமுறை மீறல் என்று மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள திருப்பூர் சுப்பிரமணியம், நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது, 10 சதவீதம் தவறு இருக்கதான் செய்யும், நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து வெளியேறுகிறேன் என்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிது படுத்திருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன் அதனால் வெளியேறுகிறேன் பதவியை வைத்து எனக்காக ஏதும் செய்து கொள்ளவில்லை . ஜப்பான், ஜிகர்தண்டாவுக்கு சிறப்பு காட்சி தொடர்பாக அரசு விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் , ஹிந்தி படத்துக்கு குறிப்பிடவில்லை என்பதால் எங்களது திரையரங்கு ஐடி டீம் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல், இந்தி படத்தை காலை காட்சியில் திரையிட்டு விட்டனர், நான் அதற்கு பொறுப்பேற்பதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சி வேண்டாம் என கருத்துதெரிவித்துவிட்டு, தீபாவளிக்கு ஹிந்தி படத்தை காலை காட்சியில் திரையிட்டது எப்படி ? என்று திருப்பூர் சுப்பிரமணியம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் அவர் ராஜினாமா முடிவை அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Comments