20 ஆட்டோக்களை உடைத்து தப்பிய கஞ்சா குடிக்கிகளின் கை கால்கள் உடைந்தன..! கத்தியுடன் மார்தட்டியவர்களுக்கு மாவுக்கட்டு
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் . நகர் பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட 20 வாகனங்களை அடித்து உடைத்த கஞ்சாகுடிக்கிகள் போலீசாருக்கு பயந்து ஓடிய போது பாலத்தில் இருந்து குதித்ததால் கை கால்கள் உடைந்தன. கத்தியுடன் ரகளை செய்தவர்களுக்கு மாறு கை, மாறுகால்களில் மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோக்களை இரவோடு இரவாக அடித்து நொறுக்கிய கஞ்சா ரவுடிகளின் கைகளை உடைக்கச்சொல்லி பெண்கள் போலீசாரிடம் முறையிடும் காட்சிகள் தான் இவை..!
சென்னை கொடுங்கையூர் ஆர். ஆர் நகர் பி பிளாக் பகுதியில் , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 ஆட்டோ, இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் என சுமார் 20 வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்தனர் . பொதுமக்கள் போலீசாரிடம் முறையிட்ட நிலையில் இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது மூன்று நபர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் கையில் கத்தி, கற்களால் ஒவ்வொரு வாகனங்களையும் அடித்து உடைத்து விட்டு செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கின்ற ஜாக்கி , லாரன்ஸ் இருவரும் போதையில் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த விஜய் மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரையும், போலீசார் துரத்திக் கொண்டு ஓடினர் அப்போது இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க முல்லை நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் இருவருக்கும் கை, கால்கள் உடைந்ததாகவும், அவர்களை மனித நேயத்தோடு மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கை கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டதால் நடக்க இயலாமல் தவித்த இரு போதை புள்ளீங்கோக்களையும், சக்கர நாற்காலியில் அமரவைத்த போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்
கஞ்சாகுடிக்கிகள் இருவருக்கும் வலது கை, இடது கால் என மாறு கை , மாறு கால்களில் மாவுக்கட்டுப்போடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போதையில் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Comments