அரிவாள்கள் - பெட்ரோல் பாம்களுடன் கண்ணபிரானின் 18 பேர் கும்பல்..! 2 கார்களில் போலீசில் சிக்கியது எப்படி.? பாதுகாப்புக்காக கொண்டு சென்றார்களாம்..!

0 3107

 நெல்லை கேடிசி நகர் சோதனை சாவடியில், பெட்ரோல் பாம்கள் மற்றும் வெட்டரிவாளுடன் காரில் சென்ற கண்ணபிரான் தலைமையிலான 18 பேர் கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இடுப்பில் சொறுகிய  அரிவாள்களையும் , இரு பைகளில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் பாம் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்

நெல்லையில் பட்டபகலில் காரில் பெட்ரோல் பாம்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் போலீசில் சிக்கிய 18 பேர் கும்பல் இவர்கள் தான்..!

திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மணி என்பவரது வீட்டிற்கு ஆறுதல் கூற இரு கார்களில் சென்றார் . ஊருக்குள் செல்லவிடாமல் அவரை போலீசார் தடுத்தனர் , வாக்குவாதத்திற்கு பின்னர் அவரை மணியின் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்

கொலை செய்யப்பட்ட மணி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு கண்ணபிரான் திருநெல்வேலி திரும்பினார். அப்போது மாநகர எல்லையான கேடிசி நகர் சோதனை சாவடியில் அவரும் அவரது ஆதரவாளர்கள் வந்த இரண்டு வாகனங்களையும் காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டனர். அதில் 8 அரிவாள்கள், 5 பெட்ரோல் குண்டுகள், குண்டுகள் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

இதனை அடுத்து கண்ணபிரான் உள்ளிட்ட 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்கள் வந்த இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை 3 பிரிவாக பிரித்து திருநெல்வேலி மாநகர், பாளையங்கோட்டை மற்றும் மகாராஜ நகர் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்து வருகின்றனர். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வரும் கண்ணபிரான் மீது 7 கொலை, 8 கொலை முயற்சி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், பத்து தினங்களுக்கு முன்பு கண்ணபிரான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டது தொடர்பாகவும் அவர் மீது புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அந்த அமைப்பின் கொள்கைபரப்பு செயலாளர் வினோத் என்பவர் கூறும் போது, கண்ணபிரானின் உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுக்காப்பு வேண்டும் என்று போலீசிடம் முன் கூட்டியே புகார் அளித்ததாகவும், அவர்கள் தரவில்லை என்பதால், சம்பவத்தன்று மணியின் வீட்டுக்கு ஆறுதல் கூற சென்ற அவரது பாதுகாப்பு கருதியே முன் எச்சரிக்கையாக பெட்ரோல் பாம், மற்றும் அரிவாளை கையோடு கொண்டு சென்றதாக விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments