நைட் 10 மணிக்கு.. திருச்சிக்கு வாடி... இல்லன்னா படத்த நெட்டுல விடுவேன்.. தங்கையை சாகடித்த காமுகனுக்கு செக்..! போலீசிடம் ஆடியோ ஆதாரம் கொடுத்த பெண்

0 5978

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில்லில் பணிபுரிந்த ஓட்டுனர் ஒருவர் மிரட்டியதால் இளம் பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் தனது சகோதரியை மிரட்டிய ஓட்டுனரிடம் குரலை மாற்றி பேசி அவனது குரூர எண்ணத்தை ஆடியோ ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்துள்ள சகோதரி , விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண் பிள்ளை என்று வீட்டுக்குள் முடக்கி வைக்காமல் தைரியமாக மதுரா கோட்ஸ் மில்லுக்கு வேலைக்கு அனுப்பிய நிலையில் ... அங்குள்ள ஓட்டுனரின் ஆபாச மிரட்டலுக்கு அஞ்சி உயிரை மாய்த்த தங்கள் வீட்டு பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு கண்ணீர் விட்டு கதறும் உறவுகள்..!

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் அபிராமி . இவர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அபிராமிக்கும் அந்த நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்த செல்வம் என்ற திருமணமான நபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிராமியை வெளியே வருமாறு அழைத்ததாகவும், வராவிட்டால் தன்னுடன் வீடியோ கால் பேசும் போது எடுத்து வைத்துள்ள ஆபாச புகைப்படத்தை சமூக வலை பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் நீண்ட நாட்களாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

தீபாவளியன்று வீட்டில் தனியாக இருந்த அபிராமி தனது சாவிற்கு காரணம், செல்வம் தான் என்று அவரது செல்போன் நம்பரை குறிப்பிட்டு அவர் தன்னை மிரட்டி வருவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பிற்பகல் 12 மணி அளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விரைந்து வந்து அபிராமியின் சடலத்தை மீட்டு பிணகூறாய்விறகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகள் சாவுக்கு காரணமான செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அபிராமியின் செல் போன் மற்றும் அவர் எழுதி வைத்த கடிதத்தை தாளமுத்து நகர் போலீசில் தந்தை ஒப்படைத்தார். போலீசார் மிரட்டியவன் யார் என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறிய நிலையில் , அபிராமியின் சகோதரி வேலம்மாள் என்பவர் செல்போன் மூலம் அபிராமி பேசுவது போல் செல்வத்திடம் பேசி உள்ளார் , போதையில் பேசிய செல்வம் வேளம்மாளை அபிராமி என்று நினைத்து உடனடியாக திருச்சிக்கு வா என ஆபாசமாக பேசி மிரட்டினார்

இந்த ஆடியோ ஆதாரத்தை தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த வேலம்மாள், செல்வத்தை கைது செய்யாமல் , உடனடியாக உடலை வாங்குமாறு போலீசார் மிரட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார்

இந்நிலையில் செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை தாங்கள் அபிராமியின் உடலை வாங்கமாட்டோம் என கூறி உறவினர்கள் அபிராமி வீட்டு முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments