பிளாட்பாரத்தில் பாய்ந்த ஸ்விப்ட் கார்.. 7 பேரை அடித்து தூக்கி வீசியது.. 2 உயிர்களை பலிகொண்ட சம்பவம்..! போதை வாகன ஓட்டியால் விபரீதம்
சென்னை அண்ணாநகரில் மது மற்றும் கஞ்சா போதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ஸ்விப்ட் கார் சாலையோரம் சென்றவர்கள் மீது மோதியதில் 2 பேர் பலியாயினர். தூய்மைபணியாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். போதை வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
மிதமிஞ்சிய போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய திகில் காட்சிகள் தான் இவை..!
சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ வழியாக திருமங்கலம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று, கோராபுட்ஸ் எதிரே வந்த போது தறி கெட்டு சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி, இரும்பு கம்பத்தின் பக்க வாட்டில் மோதி பிளாட்பாரத்திற்குள் பாய்ந்தது
இந்த அதிவேக விபத்தில் சாலையோரம் நின்றவர்கள் பிளாட்பாரத்தில் நடந்து சென்றவர்கள் அடித்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சாலையோரம் நடந்து சென்ற பெண் ஒருவர் உட்பட இருவர் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 21 வயது கல்லூரி மாணவர் விஜய்யாதவ் மற்றும் சூப்பர் மார்கெட் காவலாளி நாகசுந்தரம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரிலிருந்து இருவர் தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில் ஆசிப் என்ற நபர் மட்டும் சிக்கினார். பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆசிப் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பெரும்பாலும் போலீசார் பகல் நேரங்களில் இரு சக்கர வாகனத்தை மறித்து ஆவணங்களை பரிசோதிப்பது குடி போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா ? என்று தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இரவு 12 மணி வரை கார்களை மறித்து ரேண்டமாக சோதனை செய்கின்றனர். போதை காரணமாக சென்னையில் நடக்கின்ற பெரும்பாலான விபத்துக்கள் நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் தான் நிகழ்வதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.
எனவே நள்ளிரவு முதல் அதிகாலை வரை கார்களை மறித்து குடி போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா ? என்பதை அறிய அண்ணா நகர், பாண்டிபஜார், அடையாறு, நீலாங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments