லைக்கிற்காக இப்படியா..? சாகசத்திற்கான வீலிங்கில்.. நிலை தடுமாறினால்...? T.T.F முன்னோடிகளால் ஆபத்து...

0 2308

கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், டூவீலரை வீலிங் செய்து பட்டாசு வெடித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 2 பேரை சென்னை போலீஸார் தேடி வருகின்றனர்.

அப்பாக்கள் வாங்கிக் கொடுத்த அதிக விலை கொண்ட இருசக்கர வாகனத்தை ஒற்றை சக்கரத்தில் இயக்கி அதனை பின்னணி இசை ஒலிக்க சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கிக் கொண்ட தூத்துக்குடி இளைஞர்கள் தான் இவர்கள்.

தூத்துக்குடி துறைமுகம் சாலையில் கெத்து காட்டுவதற்காக இருசக்கர வாகனத்தின் முன்சக்கரத்தை தூக்கிக் கொண்டு ஒற்றை சக்கரத்தில் இயக்கி இளைஞர் ஒருவர் அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு லைக்கிற்காக காத்திருந்தார்.

லைக் வந்ததோ இல்லையோ பதிவு போட்ட பிரையன்ட் நகரைச் சேர்ந்த பிரவீன்ராஜ் வீட்டிற்கு நேரடியாகச் சென்றனர் தென்பாகம் போலீஸார். மக்களுக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அவரை கைது செய்ததோடு சாகசத்திற்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர் போலீஸார்.

அதே தூத்துக்குடி மாவட்டத்தில் பரமன்குறிச்சியைச் சேர்ந்த டைட்டஸ் டேனியல் என்ற இளைஞரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகச வீலிங்கில் ஈடுபட்டு அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.

இனி ஏரியா கெத்து நாம தான் என நினைத்துக் கொண்டிருக்க அவரை கொத்தாக தூக்கிச் சென்ற போலீஸார் சாகச பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

வாகனத்தின் அடையாளமோ, தனது அடையாளமோ தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த இளைஞர் ஒருவர், எவ்வித முன்யோசனையும் இன்றி, பைக்கின் முன்பகுதியில், பெட்ரோல் டேங்க் மீதே, வாண வேடிக்கை பட்டாசை கொளுத்தி வைத்துக் கொண்டு வீலிங் செய்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பைக்குல நீங்க எவ்வளவு வீலிங் செய்தாலும் இந்த டிராபிக் போதையனை மீறி லைக் வாங்க முடியாது என்பது போல சென்னை தேனாம்பேட்டையில் முக்கிய சாலையில் மதுபோதையில் டிராபிக்கை தள்ளாடியபடியே கிளியர் செய்தார் ஒரு இளைஞர். காவல்துறை வண்டியையே மறித்து தனது கடமையை செய்தவர் மறக்காமல் சல்யூட் அடித்து வண்டியை அனுப்பி வைத்தார். 

சமூக வலைத்தளங்களில் சாகச வீடியோக்களை வெளியிடும் பிரபலங்களைப் பார்த்து தங்களையும் அதுபோல மாற்றிக் கொள்ள நினைத்து ஆபத்தான சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாமென போலீஸார் எச்சரித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments