உங்க பங்காளி சண்டைக்கு நாங்க தக்காளி தொக்கா...? நாய்களிடம் மாட்டிய கார்

0 2330

கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி வீசிச் சென்றதால் காரின் உரிமையாளர்கள் பல ஆயிரங்களை செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.

கோவை பி.என்.புதூரில் ராதிகா அவென்யூவில் உள்ள தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஜோஸ். காலையில், வெளியே வந்து பார்த்த போது காரின் முன்பக்க பகுதிகள் ஆங்காங்கே உடைந்து கிடந்ததோடு, வயரிங் அமைப்புகள் சிதைந்த நிலையில் கிடந்தன.

விஷமிகள் யாராவது செய்த வேலையாக இருக்குமோ என நினைத்த ஜோஸ், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போது, சில நாய்கள் சுற்றி சுற்றி வந்து காரை ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது பதிவாகியிருந்தது.

அப்பகுதியில் ஓடி வந்த பூனை ஒன்று ஜோஸின் காருக்கு அடியில் அடைக்கலமாக சென்று பதுங்கிக் கொள்ள, நாய்களோ காரை சுற்றி சுற்றி வந்தன. பூனையை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விட வேண்டுமென நினைத்து அது பதுங்கிய பேனட் பகுதியை துவம்சம் செய்தன. ஆனாலும், பூனை நாய்களுக்கு போக்கு காட்டி விட்டு அடுத்தத் தெருவிற்கு தப்பியோடியது.

அடுத்த தெருவில் அருண்பிரசாத் என்பவரின் கியா காருக்கு அடியில் புகுந்துக் கொண்டது அந்த பூனை. விடாமல் துரத்திய நாய்களோ அந்த கியா காரையும் துவம்சம் செய்து விட்டு தோல்வியோடு திரும்பிய வழியில், மற்றொரு டூவீலர் சீட்டையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

கார் வாங்கி 6 மாதத்தில் முதல் சர்வீஸ் கூட விடாத நிலையில் தனது காரை நாய்கள் சேதப்படுத்தியதாக கூறினார், கார் ஓனர் அருண்பிரசாத்.

பெருகி வரும் தெரு நாய்களை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments