சென்டர் மீடியனை உடைத்து ஆம்னி பஸ் மீது மோதிய அரசுப்பேருந்து தூக்கத்திலேயே பலியான பயணிகள்... தொடர் பணி விபத்திற்கு காரணமா...?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் சென்ற ஆம்னி பஸ்சின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தை ஓட்டி சென்றார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் ஏழுமலை. வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் சென்ற போது மேம்பாலம் அருகே ஓட்டுநர் சற்று கண்ணயர்ந்ததாக கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியன் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்றது. அப்போது, பெங்களூர் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் 2 பேருந்துகளும் அப்பளம் போல் நொறுங்கியது.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் என்ன நடந்தது என்பதை அவர்களால் உணர முடியவில்லை என கூறப்படுகிறது. மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர் போலீஸார். அதில், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து பகுதியை பார்வையிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்து நடைபெற்ற பகுதிக்கு முன்பாக வளைவு, மற்றும் மேம்பாலம் உள்ளதை குறிக்கும் முறையான அறிவிப்பு பலகை அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் வடக்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி. ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் ரிப்ளக்டர் அமைப்பது மற்றும் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் டி.ஐ.ஜி முத்துசாமி.
விபத்திற்குள்ளான அரசுப் பேருந்தை இயக்கிய ஏழுமலை கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டு வந்ததாக சக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஓட்டுநர்களுக்கு தொடர் பணி வழங்குவதை நிர்வாகம் தவிர்க்க வேண்டுமென போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையின் நடுப்பகுதி மற்றும் சுவர்களுக்கு முன்பாக சிறிய அளவிலான, பிளாஸ்டிக்கிலான சிவப்பு வர்ண ரிப்ளக்டருடன் கூடிய தடுப்புகளை அமைத்தால், பேருந்து அதன் மீது மோதினால் தூக்கத்தில் இருக்கும் ஓட்டுனர் சுதாரித்துக் கொண்டு விழித்து உயிரிழப்பை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்கின்றனர் வாகன ஓட்டிகள். தூக்கம் வந்தால், அது எவ்வளவு அவசரமாக இருந்தாலும், வாகன ஓட்டுநர்கள், சற்று ஓய்வு எடுத்து சென்றால், இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தவிர்க்கலாம்.
Comments