இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா.? புட்டு மாவுல கட்டியிருப்பாங்களோ ? தொட்டாலே உதிருது... யார் பொறுப்பு..? பூரா சுவரும் பேட்ச் ஒர்க்..!

0 3461

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆட்சி விளாகம் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் நிதியின் கீழ் இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள 80 தொகுப்பு வீடுகள் , தொட்டால் உதிரும் புட்டு போல தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கையை வைத்து தேய்த்தாலே பட்டுன்னு... புட்டு மாவு மாதிரி உதிரும் சுவரைக்கொண்ட இந்த அதிசய கட்டுமானம் செங்கல்பட்டில் இருந்து 69 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள ஆட்சிவிளாகம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ,கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் மத்திய மாநில அரசு நிதியின் கீழ் இருளர்களுக்கு 30 வீடுகள், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில், திருநங்கைகளுக்கு 50 வீடுகள் கட்ட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 80 வீடுகள் கட்டப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வீடுகள் தரமற்றதாகவும் கை வைத்தாலே பெயர்ந்து விழுவதைப் பார்த்து பயனாளிகள் குற்றம் சாட்டியதால் திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் வீடுகள் முழுமையாக சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன் படி அனைத்து வீடுகளுக்கும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்னரும் வீடுகள் புட்டு மாவு போல் பெயர்ந்து கொட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பயனாளிகள்.

தரமற்ற கட்டுமான பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதால் அந்த வீடுகள் இப்படி உள்ளதாகக் கூறப்படும் நிலையில் , தனிக் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு இதனைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , இந்த வீடுகள் அனைத்தும் ஊராட்சி நிர்வாகத்தால் கட்டப்படுவதாகவும் உரிய அமைச்சரிடம் கூறி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments