ஒரே ஒரு போலீஸ் தான் ஒன்னும் செய்ய முடியல... ரெயில்வே எஸ்.பி கைவிரிப்பு.. பாதுகாப்பு கேட்ட பெண்ணுக்கு பதில்..!
ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மட்டுமே பணியில் இருந்ததால், முன்பதிவு பெட்டியில் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பெண் புகார் அளித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ரெயில்வே எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்...
கொச்சுவேலியிலிருந்து கோரக்பூர் சென்ற விரைவு ரயில் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஒருவர் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய போது , ஏற்கனவே பெட்டியை ஆக்கிரமித்து நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கூட்டத்தில் சிக்கி பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் பயணித்ததாகவும், பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அதே ரயிலில் கிச்சன் பெட்டியில் (pantry) பயணித்து சென்னை வந்து சேர்ந்ததாகவும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த பெண் புகார் தெரிவித்தும் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ரயில்வே எஸ்.பி. சுகுணா சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், சம்பவத்தன்று அந்த பெண், ரயில்வே பாதுகாப்பு படையின் 139 என்ற உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நேரில் சென்றுள்ளார்.
ஆனால் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கோவை, திருப்பூரில் ஏறிய வடமாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிவிட்டனர். அந்த ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்களை இறக்கி மாற்று ரயிலில் அனுப்பி வைக்க அந்த வழித்தடத்தில் வேறு ரெயில்கள் இல்லாததாலும் அவர்களை வெளியேற்ற முடியவில்லை என கூறினார்.
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க சில திட்டங்கள் வகுத்துள்ளோம் என்று கூறிய சுகுணாசிங், ஒரு சில சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது; ரயில்வே போர்டு மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் ஏறும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்த சுகுணா சிங், முறையாக முன்பதிவு செய்தவர்கள் இனி எந்தவித அசவுகரியமும் இல்லாமல் ரெயிலில் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்
Comments