வீட்டுக்கு பூட்டுல்லாம் வேணாம் .. பூட்டையே மறைத்து வெல்டிங் வையி.. வில்லனான நடிகர் நாகேந்திர பிரசாத்..! ரூ 25 லட்சம் கொடுத்தவர் வீதியில் தவிப்பு

0 3940

வீட்டை பூட்டிச்சென்றால் தானே திறப்பீர்கள் பூட்டையே மறைத்து வெல்டிங் வச்சா எப்படி திறப்பீங்க.. என்று விஞ்ஞான முறையில் வாடகைதாரரை வீதியில் நிறுத்தியதாக நடிகர் நாகேந்திர பிரசாத் புகாருக்குள்ளாகி இருக்கிறார்

கில்லி , ஒன்,டூ.த்ரி, ரிதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடன கலைஞராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருப்பவர் நாகேந்திர பிரசாத் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெருவில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விடும் பொறுப்பை எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனம் ஏற்றிருந்தது.

தி. நகரில் உள்ள ரெஸ்டாரண்டில் மேலாளராக பணியாற்றி வரும் விக்னேஷ் என்பவர் இந்த நிறுவனத்திடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை ஒத்திக்கு பெற்றதாக கூறப்படுகின்றது. விக்னேஷ் கொடுத்த 25 லட்சம் ரூபாயில் இருந்து மாதம் 36 ஆயிரம் வீதம் நாகேந்திர பிரசாத்திற்கு வாடகை செலுத்தப்படுவதாக கூறி உள்ளனர். அந்த வீட்டில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கேர்டேக்கராக செயல்பட்ட அந்நிறுவனம் நடிகர் நாகேந்திர பிரசாத்துக்கு ஒரு வருடம் ஒழுங்காக வாடகை தொகையை கொடுத்த நிலையில் பின்னர் நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால், விக்னேஷிடம் நாகேந்திர பிரசாத் தரப்பு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது, ஆனால் விக்னேஷ் தான் லீசுக்காக ஏஜெண்டிடம் கொடுத்த 25 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் வீட்டை காலி செய்துவிடுவதாக கூறி உள்ளார்.

இந்த விவகாரம் நீடித்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு விக்னேஷும் அவரது மனைவியும் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் இரும்பு கேட்டில் போடப்பட்ட பூட்டை திறக்க இயலாதபடி , பூட்டை மறைத்து இரும்பு தகடால் வெல்டிங் வைத்து சென்றிருப்பதை கண்டு மிரண்டு போனார். வீட்டுக்குள் தனது வளர்ப்பு நாய் இருப்பதாகவும், அத்துமீறலில் ஈடுபட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

விரைந்து சென்ற போலீசார் , சம்பவ இடத்திற்கு நடிகர் நாகேந்திர பிரசாத்தை வரவழைத்து , பூட்டை திறந்து நாயை பத்திரமாக மீட்டனர். நாய் உள்ளே இருந்த நிலையில் பூட்டப்பட்டதால் உணவில்லாமல் திங்கட்கிழமை காலை முதல் தவித்துள்ளது, செவ்வாய்கிழமை வெல்டிங் வைத்ததை அகற்றி விட்டு பூட்டை திறந்த போது கிடு கிடுவென ஓடி வந்த நாய் விக்னேஷின் மீது ஏறிக் கொண்டு அவரைக் கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது

வீட்டுக்குள் குடும்பத்துடன் சென்ற விக்னேஷ், தனது செல்லபிராணிக்கு உணவு அளித்து தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆனந்தக் கண்ணீர் விட்டார்

இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். ஏஜெண்டான எஸ்.டி.எஸ்.கே கட்டப்பா சிவக்குமார் என்பவர், நடிகர்கள் நாகேந்திர பிரசாத், டேனி, நடிகை பவித்ரா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரின் வீடுகளை வாடகைக்கு பெற்று லீசுக்கு விட்டு பல கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிக வாடகைஆசைக்காட்டி , வீட்டு உரிமையாளர்களிடம் , தனியார் ஏஜெண்டுகள் வீடுகளை வாடகைக்கு பெறுவதாக கூறப்படுகின்றது. சில ஏஜெண்டுகள் மோசடி செய்யும் நோக்கத்தில் 3 ஆம் நபரிடம் லீசுக்கு என்று பல லட்சங்களை பெற்றுக் கொண்டு வீடுகளை கொடுத்து விடுகின்றனர். அவர்களிடம் பெற்ற லட்சங்களில் இருந்து சில ஆயிரங்களை மாதவாடகையாக வீட்டு உரிமையாளர்களுக்கு கொடுக்கும் ஏஜெண்டுகள் பின்னர் தலைமறைவாகிவிடுகின்றனர். வீட்டு உரிமையாளர்களோ தங்களுக்கு தெரியாது என்று கையை விரித்து விடுவதால் வீட்டில் குடியிருப்போர் தங்கள் லீசுக்காக கொடுத்த பல லட்சம் ரூபாய் தொகையை இழக்கும் நிலை உருவாகின்றது .

எனவே லீசுக்காக வீடுதேடுவோர், உரிமையாளரிடம் மட்டுமே பணம் கொடுக்க வேண்டும் என்றும் லீசு ஒப்பந்த பத்திரத்தில் மூன்று பேரும் சேர்ந்து கையெழுத்திட்டால் இது போன்ற மோசடிகளை தவிர்க்க வாய்ப்புண்டு என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments