புது வண்ணாரப்பேட்டைக்கு புத்தாடை எடுப்பதற்காக வந்த ஆட்டோ ஓட்டுநரை ஒருமையில் பேசிய போக்குவரத்துக் காவலர்
தீபாவளியை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி , மகன் மற்றும் மகளுடன் புத்தாடை எடுப்பதற்காக புது வண்ணாரப்பேட்டைக்கு வந்த்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து காவலர், ஆட்டோ ஓட்டுநரை பார்த்து டேய்... என ஒருமையில் பேசியதுடன், தீபாவளி கொண்டாடணுமா வேண்டாமா என்றும் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து காவலர் தன்னை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத ஆட்டோ ஓட்டுநர், உங்கள் மகன் முன்பாக யாராவது உங்களை இப்படி பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா... என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரோடு சேர்ந்து அவருடைய மகளும் போக்குவரத்து காவலரிடம் 'என் அப்பாவை எப்படி நீங்கள் ஒருமையில் பேசலாம்' என வாதிட்டுள்ளார்.
அடுக்கடுக்கான கேள்விகளால் செய்வதறியாது திகைத்த போக்குவரத்து காவலர், இங்கும் அங்குமாய் நகர்ந்து கொண்டே இருந்துள்ளார் ... ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் தன்னிடம் கேள்வி கேட்பதை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என செய்தியாளரை மிரட்டும் வகையில் பேசியபோது அருகில் இருந்த மற்றொரு போக்குவரத்துக் காவலர் அந்த குடும்பத்தினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
Comments