தெற்கு ரெயில்வே தூங்குகிறதா ? முன்பதிவு பெட்டியில் ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்கள்..! ஓடும் ரெயிலில் திணறிய பெண் பயணிகள்

0 44458

72 பேர் பயணிக்க கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் எடுக்காமல் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் முன்பதிவு செய்தும் கூட மூச்சு விட முடியாத அளவுக்கு நெரிசல் இருந்ததாகவும், அதனால் உணவு தயார் செய்யும் பெட்டியில் நின்றபடி சேலத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்ததாகவும் பெண் பயணி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது முன்பதிவில்லாத ரயில் பெட்டி என்று நினைத்து விடாதீர்கள். 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்ட 72 பயணிகளின் இருக்கைகளையும் ஆக்கிரமித்து வட இந்திய தொழிலாளர்கள் அமர்ந்திருக்கும் நெருக்கடியான காட்சிகள் தான் இவை..!

கேரள மாநிலம் கொச்சுவெலி முதல் உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் வரை செல்லும் விரைவு ரயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பயணம் செய்வதற்காக எஸ்-3 பெட்டியில் முன்பதிவு செய்துள்ளார். அவருடன் மற்றொரு தம்பதி உள்ளிட்ட மேலும் நால்வர் அதே பெட்டியில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருந்தனர்.

சேலத்தில் ரயில் வந்து நின்றதும் ரெயில் பெட்டியில் ஏறி பார்த்த போது, முன்பதிவு செய்த அந்த பெட்டியில் நூற்றுக்கணக்கானோர் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவிற்கு நின்று கொண்டிருந்ததால் மிரண்டு போயுள்ளார். இதில் பயணம் செய்வது கடினம் என கீழே இறங்க முற்பட்ட போது ரயில் கிளம்பி விட்டதால் வேறு வழியின்றி அதேபெட்டியினுள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கபட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

நெரிசலால் மூச்சு விடக்கூடிய முடியாத நிலை ஏற்பட்ட போது, ரயிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணி, பெட்டியின் அவசரகால சங்கிலியை இழுத்து நிறுத்த முற்பட்டபோது வடமாநில சேர்ந்த இளைஞர்கள் நிறுத்த விடாமல் தடுத்ததாக கூறிய அப்பெண், சுற்றி பெரும்பாலும் வட மாநில இளைஞர்களாக இருந்த நிலையில் பாதுகாப்பற்று உணர்ந்த தன்னை , திருநங்கைகள் இருவர் மீட்டு ரயிலின் உணவு கூடத்தில் பயணிக்க உதவியதால், பாதுகாப்பாக சென்னை வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து ரயில்வே காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதே போல பெங்களூரில் இருந்து சென்னை வழியாக பாடலிபுத்ரா செல்லும் விரைவு ரெயிலில் எஸ் 2 முன்பதிவு பெட்டியிலும் வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் சென்னைக்கு வந்த பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளானதாகவும், ரயில்வே துறையில் ஆன்லைன் புகார் மையத்துக்கு அளித்த புகாருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.

வட மாநிலம் நோக்கிச்செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவு பெட்டிகளில் தொடர்கதையாக நடக்கின்ற இந்த ஆக்கிரமிப்பு அட்டகாசத்தை தடுக்க தெற்கு ரெயில்வே எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்பதும் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பாக இனி ரெயிலில் அழைத்துச்செல்வது என்று தெரியவில்லை என்பதும் பயணிகளின் குமுறல்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments