அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு... ஆதரவாளர்களை தேடிச் சென்று சோதனை நடத்தும் ஐ.டி
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையதாக சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீஸார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சுமார் 30 வாகனங்களில் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 120 பேர், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் தொடர்புடையதாக கருதப்படும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையிலும் உள்ளூர் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளரும், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளருமான மீனா ஜெயக்குமாரின் கோவை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபகுதியில் உள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சிங்காநல்லூரைச் சேர்ந்த மாநகராட்சி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் சாமி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை கட்டுமான பணிகளுக்கு மின்சாதன பொருட்களை விநியோகம் செய்து வரும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அமித் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழில் அதிபரான செவ்வேல் என்பவரது சென்னை செனாய் நகரில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் எ.வ.வேலு ஆதரவாளரான கரூர் தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் பெரியார் நகரிலுள்ள வீட்டிற்கு 8 கார்களில் சென்று வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தோட்டக்குறிச்சியில் உள்ள தி.மு.க. நிர்வாகி சக்திவேல் மற்றும் அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லக் கூடிய சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம், அவரது வீடு உள்பட 5 இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
Comments