அய்யோ காப்பாத்துங்க... மருத்துவரை மடத்தனமாக தாக்கிய லாரி ஓட்டுனர்கள்..! கதறி அழுத பெண் மருத்துவர்
பல்லாவரத்தில் கார் மீது உரசிய லாரியை மறித்து நியாயம் கேட்ட மருத்துவரையும் அவரது மனைவியும் தாக்கி செல்போனை பறித்ததாக லாரி ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்ப நினைத்த லாரி ஓட்டுனர், மருத்துவரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
காரின் மீது மோதிய டாரஸ் லாரி ஓட்டுனர் கூட்டாளியுடன் சேர்ந்து கார் உரிமையாளரான மருத்துவர் தம்பதிகளை கடுமையாக தாக்கும் காட்சிகள் தான் இவை..!
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதிகளான மேகசியான், தாரணி இருவரும் தங்களது காரில் பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்ற போது டாரஸ் லாரி ஒன்று உரசிச்சென்றதாக கூறப்படுகின்றது. இது குறித்து கேட்டதற்கு லாரி ஓட்டுனர் ஆபாசமாக பேசிவிட்டு லாரியை வேகமாக எடுத்துச்செல்ல முயன்றதால் மருத்துவர், லாரியில் சாவியை பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அதுவரை சாலையோரம் நிற்கும்படியும் மருத்துவர் கூறிய நிலையில் லாரி ஓட்டுனரான சதீஷும், கூட்டாளியான ஜே.சி.பி ஓட்டுனர் சந்துரு என்பவரும் சேர்ந்து மருத்துவரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது
பேசிக் கொண்டிருக்கும் போதே மருத்துவரையும் அவரது மனைவியையும் தாக்கிய லாரி ஓட்டுனர், அதனை வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்து தாக்கினார். கூட்டாளி சந்துருவும் வீடியோ எடுத்தவரை தாக்கினார்
தகவல் அளித்து நீண்ட நேரம் கழித்து வந்த பல்லாவரம் போலீசார் , விபத்தை ஏற்படுத்தி விட்டு தாக்குதலில் ஈடுபட்ட இரு ஓட்டுனர்களிடமும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்
விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் லாரி உரிமையாளர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக ஏராளமான வழக்கறிஞர்கள் வந்து மருத்துவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் விழுந்து கேட்கிறேன் சென்று விடுங்கள் என்று மருத்துவர் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார்
இதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் சதீஷ், கூட்டாளி சந்துரு உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments