வாங்கலாமா..? வேணாமா..? லஞ்ச ஒழிப்பு அதிகாரி பேச்சால் குழம்பிய நகராட்சி ஊழியர்கள்!
அரசுப் பணியில் லஞ்சம் வாங்காத யாராவது இருக்கிறீர்களா.. உங்கள் காலில் விழுகிறேன்.. என்று திருவள்ளூரில் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் ஊழல் தடுப்பு ஆய்வாளர் கேட்ட போது, அதிகாரிகளில் ஒருவர் கூட பதிலளிக்காமல் அமைதி காத்தனர்.
நாடு முழுவதும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி பேசினார், திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி. 'தமிழ்நாட்டில் எந்தத் துறை ஊழலில் முதல் இடத்தில் உள்ளது' என்று தமிழரசி கேட்டதும் 'கப் சுப்' என்று அமைதியாயினர், ஊழியர்கள்.
பல முறை கேட்ட பின், ஆர்.டி.ஓ. ஆஃபீஸ், பத்திரப்பதிவு அலுவலகம் என ஊழியர்கள் ஆளுக்கொன்றாகச் சொல்ல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஆய்வாளர் தமிழரசி, வருவாய்த் துறை தான் லஞ்சம் பெறுவதில் முதல் இடத்தில் உள்ளது என்றார்.
அடுத்து, 'இத்தனை ஆண்டு அரசுப் பணியில் நான் லஞ்சம் வாங்கவில்லை என ஒருவராவது கூறுங்கள்.. உங்கள் காலில் விழுகிறேன்..' என்று ஊழல் தடுப்பு ஆய்வாளர் கேட்ட போதும் மவுனமாகவே அமர்ந்திருந்தனர், ஊழியர்கள் அனைவரும்.
அரசு அலுவலகங்களில் சாமான்ய மக்களை நடத்தும் விதம் சரியில்லை என்று குறிப்பிட்ட தமிழரசி, டிப்-டாப் உடை அணிந்து வருபவர்களுக்கு தரும் மரியாதையை சாதாரணமாக வருவோருக்கு தருவில்லை என்றார்.
ஒரு படி மேலே போய், எளிமையாக இருப்பவர்களுக்கு மரியாதை கொடுத்துவிட்டு, 'செலவுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு போங்கள் சார்' என்று கேட்டால், அதை மக்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள் என்று லஞ்சம் வாங்க யோசனை வேறு தெரிவித்தார், லஞ்ச தடுப்பு ஆய்வாளர்.
2009-ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சமாக, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை கேட்டுப் பெற்றதாகவும், அது போதாது என்று கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் கேட்ட போது தான் அந்த நபர் கோபடைந்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ததாகவும் நினைவு கூர்ந்த ஆய்வாளர் தமிழரசி, லஞ்சம் வாங்கியவர்களின் குடும்பம் நன்றாக இருப்பதில்லை என்றும் கூறினார்.
லஞ்சம் வாங்குவோர் தங்கள் குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த ஆய்வாளர் தமிழரசி, லஞ்சம் பெற்று சிறைக்கு சென்றவர்களை கட்டிய மனைவியோ, சொந்தங்களோ கூட மதிப்பதில்லை என்றார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பேசி முடிக்கும் வரை, லஞ்சம் வாங்கலாம் என்கிறாரா, அல்லது வேண்டாம் என்கிறாரா என்ற குழப்பத்திலேயே அமர்ந்திருப்பது போல, ஆய்வாளர் தமிழரசியின் முகத்தை மவுனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர், நகராட்சி ஊழியர்கள்.
Comments