என்னை மதிக்கலன்னா.. பொண்ணே வேண்டாம்.. காதல் திருமண ஜோடி கொலை..! இனம் ஒன்றா இருந்தாலும் பணம் இல்லையாம்..!
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடியை மர்மகும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றே நாட்களில் தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
காதல் திருமணம் செய்ததால் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட தனது மகனையும் மருமகளையும் பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
தூத்துக்குடி தேவர் சிலை பின்புறம் உள்ள திருவிக நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம், இவர் அதே பகுதியை சேர்ந்த பால்வியாபாரியும் பைனான்ஸியருமான முத்துராமலிங்கம் என்பவரின் மகளான கல்லூரி மாணவி கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார். இருவரது காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான முத்துராமலிங்கத்துக்கு தெரியவந்ததும் இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை காலிசெய்த வசந்தகுமார் குடும்பத்தினர் அங்கிருந்து முருகேசன் நகருக்கு குடி பெயர்ந்துள்ளனர். வாடகைவீடு மாறினாலும், மாரிச்செல்வமும், கார்த்திகாவும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழா அன்று கார்த்திகா வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்படுகின்றது. முத்துராமலிங்கம் குடும்பத்தினர் முருகேசன் நகரில் உள்ள வசந்த குமார் வீட்டிற்கு தேடிச்சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அந்த வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு திட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்துச்சென்ற மாரிச்செல்வம், அங்குள்ள கோவிலில் வைத்து உறவினர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. திருமணம் முடிந்து ஒருநாள் கழித்து தூத்துக்குடிக்கு திரும்பியபோது தந்தை தாய் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் வீட்டில் புதுமண தம்பதியினர் தனியாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்டு மர்மக்கும்பல், வீட்டிற்குள் புகுந்து மாரிச்செல்வத்தையும், கார்த்திகாவையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர் வாசலில் அமர்ந்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் வீட்டிற்குள் சென்று இந்த படுபாதகச் செயலை செய்ததாக பெண் ஒருவர் தெரிவித்தார்
கொலை நடந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய் , சிறிது தூரம் ஓடிச்சென்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை
பின்னர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண் வீட்டை விட பையன் வீட்டில் வசதி குறைவு என்பதாலும், இருவருக்குமிடையே நடந்த சண்டையின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட வார்த்தைகளின் வீரியத்தாலும் கூலிப்படை ஏவி இந்த கொடூர கொலை நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இந்த கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.
கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மாரிசெல்வம் மற்றும் கார்த்திகாவின் உடல்கள் உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments