பெண் பெயரிலான பேக் ஐடி மூலம் மனைவியின் காதலனை மயக்கி போலீசில் மாட்டிவிட்ட கணவர்..! முள்ளை முள்ளால தான் எடுக்கனும்..!
மனைவியின் மனதை கெடுத்து விவாகரத்து கோர வைத்த இன்ஸ்டா காதலனை பெண்ணின் பெயரிலான பேக் ஐடி மூலம் தட்டித் தூக்கிய கணவர் , போலீசில் சிக்க வைத்த சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது. பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இன்ஸ்டா மன்மதன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இன்ஸ்டாவில் பழகி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டு தற்போது சிறைபறவையாகி கம்பி எண்ணி வரும் மன்மத ராசா மாஸ் சுந்தர் இவர் தான்.!
சொந்தமாக தொழில் நடத்தி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவருக்கும் திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த 28 வயது பெண்ணிற்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு கயத்தாரில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. பிரசவத்திற்காக கடந்த 2022 ஆம் தாய் வீட்டுக்கு ஆண்டு சென்ற மனைவி 6 மாதங்கள் கழித்து குழந்தையோடு கணவர் வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்கு வந்தது முதலே அந்த பெண் செல்போனில் பேசுவதும் இன்ஸ்டாவில் சாட் செய்வதுமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மனைவியிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
எனவே, மனைவிக்கு தெரியாமல் அவருடைய செல்போனை எடுத்து பார்த்த போது இன்ஸ்டாகிராமில் Mass sundhar 17 என்று குறிப்பிட்ட ஐடியோடு அவர் அடிக்கடி சாட் செய்து வந்தது தெரியவந்தது. அந்த ஐடி யார் என்று கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றதோடு விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீசும் அனுப்பினார் மனைவி.
திருமணமான இரண்டே ஆண்டில் தனது வாழ்க்கையில் விளையாடிய அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்கிய கணவர் இன்ஸ்டாகிராமில் நந்தினி என்ற பெயரில் போலியாக ஒரு ஐடி உருவாக்கினார். அந்த ஐடியிலிருந்து மன்மத சுந்தரின் ஐடிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார் தூத்துக்குடி இளைஞர்.
தனக்கான பொறி என்பதை தெரியாமல் பெருச்சாளிக்கு பெரிய கருவாடு கிடைத்தது போல நட்பு அழைப்பை ஏற்று தொடர்ந்து சாட்டிங்கில் பேசி வந்துள்ளார் சுந்தர். ஒருகட்டத்தில் பேச்சு வேறு திசைக்குச் செல்ல , ஆடை இல்லாமல் படங்களை எடுத்து அனுப்ப வேண்டுமென சுந்தர், பேக் ஐடியான தூத்துக்குடி இளைஞரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். எந்தவிதமான படங்களையும் அனுப்பாமல் இவர் சமாளித்து வந்த நிலையில், தனது ஐடிக்கு மற்ற பெண்கள் அனுப்பிவைத்ததாக கூறி ஏராளமான பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளார் மாஸ் சுந்தர்.
அதில் தன்னுடைய மனைவி புகைப்படம் உட்பட பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி இளைஞர். திருமணத்திற்கு முன்பே அவருடன் பழக்கம் உள்ளதா ? அல்லது திருமணத்திற்குப் பிறகு இந்த பழக்கம் ஏற்பட்டதா ? என்பதை கண்டறிய முடியாததால் இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்
விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீஸார் நெல்லையைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞரை கைது செய்தனர். எந்த வேலைக்கும் செல்லாமல் செல்போனோடு சுற்றி வந்த சுந்தர் தன்னை வசதி படைத்த இளைஞர் போல காட்டிக்கொண்டு, போட்டோ சூட் நடத்தியும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டும், பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். தன்னை நம்பி பழகும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களது புகைப்படங்களை பெற்று ஆபாசமாக மார்பிங் செய்தும், சாட்டிங் விபரங்களை வைத்து மிரட்டியும் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. சுந்தரின் செல்போனில் இருந்து மேலும் 10 பெண்களின் புகைப்படங்கள் இருந்ததால் அவருடைய செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சமூக வலைத்தளத்தில் மயக்கும் பேச்சை நம்பி பெண்கள் புகைப்படங்களை அனுப்பினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.
Comments