காஸா போரில் அதிரடி திருப்பம்! இஸ்ரேல் கண்டுபிடித்துள்ள 'ஸ்பாஞ்ச்' குண்டுகள்..!

0 5423

காஸா போரில் தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள ஹமாஸின் சுரங்கங்களை சமாளிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை என்ன, அவை இஸ்ரேலுக்கு எப்படி கைகொடுக்கும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

காஸாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் முழு அளவில் இன்னும் நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள்.

காஸாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள சுரங்கங்களில் இருந்து போராளிகள் வெளியே வந்து எதிர்பாராத கொரில்லா தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் ராணுவனத்தின் தயக்கத்துக்குக் காரணம்.

2021-இல் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை என்று கொக்கரித்தது, ஹமாஸ்.

ஹமாஸின் இந்த சக்கரவியூகத்தை முறியடிக்க இஸ்ரேல் ராணுவம் அறிமுகப்படுத்தி இருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான், ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன ரசாயன ஆயுதம்

ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இரு வகை ரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும் ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் ரசாயன நுரை, மிகச் சில விநாடிகளுக்குள் பெரியளவுக்கு பரவி, அந்த இடத்தையே நிரப்பி கெட்டியாகி விடும். இவற்றை சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்குக் குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் போராளிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.

2021-இல் ட்ஸி-எலிம் ராணுவ முகாமில் ஹமாஸின் சுரங்கங்களைப் போன்ற மாதிரிகளை

உருவாக்கி ஸ்பாஞ்ச் குண்டுகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே சோதித்துப் பார்த்துள்ளதாக தெரிகிறது. அப்போது, கவனக் குறைவாக ஸ்பாஞ்ச் குண்டுகளை கையாண்ட இஸ்ரேலிய வீரர்கள் சிலருக்கு கண்பார்வை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தளவுக்கு ஆபத்தான ரசாயனங்களைக் கொண்டு ஸ்பாஞ்ச் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்பாஞ்ச் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தத் தொடங்கும் போது, போர் புதிய பரிமாணத்துக்குச் செல்லக் கூடும் என்கின்றனர், ராணுவ வல்லுநர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments