எவ்வளவு உயரமா பறந்தாலும் பசிச்சா பருந்து கீழே இறங்கி வந்து தான் ஆகனும்..! ஜெயிலருக்கு லியோ விழாவில் பதில்
லியோ வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர்கள் அர்ஜூன் , மன்சூரலிகான் ஆகியோர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய நிலையில் இயக்குனர் மிஷ்கின் விஜய்யை வைத்து ஜேம்ஸ் பாண்ட் போன்ற படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்தார்
லியோ ஆடியோ விழா ரத்தானாலும், வெற்றி விழா என்று அழைத்ததும் தாயை தேடிவரும் குழந்தை போல விஜய்யை காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
லியோ படம் வெளியாகி 12 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 540 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்து படம் வெற்றி பெற்றதாக கூறி பிரமாண்ட விழா சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது, ஸ்டேடியத்துக்குள் சுற்றிவந்த விஜய் , தனது ரசிகர்களை னோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார். நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கட்டித் தழுவி பாராட்டினார்.
இதில் பங்கேற்று பேசிய லியோ படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார், விஜய்யை புகழ்ந்து பேசிய போது, பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசி எடுத்தால் கீழே இறங்கி வந்துதான் ஆகணும் என்று மறைமுகமாக ஜெயிலர் படவிழாவில் பேசிய ரஜினியின் கருத்தை கலாய்த்தார்.
மன்சூரலிகான் பேசும் போது தமிழகத்தின் நாளையதீர்ப்பு நடிகர் விஜய் ஆக இருக்க வாழ்த்துக்கள் என்றதோடு தமிழகம் சீரழிந்து கிடக்கிறது ... அதை காக்க தண்ணி.. தம்.. எல்லாத்தையும் விட்டு, நீங்களும் , நடிகர் விஜய்யும், கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
நடிகர் விஜய் யார் சொன்னாலும் கேட்டுக் கொள்வார், அதற்கு தன் செயலால் தான் பதில் சொல்வார், கூடிய விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறிய நடிகர் அர்ஜூன், விஜய்யாக இருப்பது கஷ்டமா அல்லது இது நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இஷ்டமா என்று கேள்வி எழுப்பினர். விஜய்யிடம் மைக் கொடுக்கப்பட்டதும், வெளியில் இருந்து பார்க்க விஜய்யாக இருப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் அது ரொம்ப சுலபமானது, காரணம் எனது ரசிகர்கள் என்னுடன் இருப்பது தான் என்று விஜய் பதில் அளித்தார்
படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேசும் போது, லியோ ஆடியோ விழா ரத்தானதால் தனக்கு கடுமையான மனவலி ஏற்பட்டதாகவும், அப்போதே படத்தின் வெற்றிவிழாவை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்
மிஷ்கின் பேசும் போது, விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் போன்ற படத்தை இயக்க வேண்டும் என்று கூறினார், யோகன் அத்தியாயம் ஒன்று படம் எடுத்தால் அதில் விஜய்யை ஜேம்ஸ் பாண்டாக பார்க்கலாம் என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். லியோ படவிழாவில் பங்கேற்றோர் விஜய்யை புகழ்ந்து பேசியதை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
Comments