சிசிடிவி கேமரான்னா பயம்.. வச்சீங்கன்னா மாட்டிக்குவோம்.. அங்கன்வாடி ஊழியர்கள் அட்ராசிட்டி..! ஸ்டோர் ரூமில் பாலூட்டும் தாய்மார்களா..?

0 2097

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முறைகேடுகளை தடுக்க ஸ்டோர் ரூம்களில் சிசிடிவி பொருத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கேமரா பொருத்தப்பட்டாது என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.

திருட்டை தடுக்கவும்.. திருடர்களை அடையாளம் காணவும் சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருக்கும் என்று போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ஊரெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் நிலையில்.... அங்கன்வாடி மையங்களில் உள்ள ஸ்டோர் ரூம்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராகத்தான் இந்த ஆக்ரோஷ போராட்டம்..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 4 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் 20 மாணவர்கள் வந்திருப்பதாக கூறி அவர்களுக்கு சமையல் செய்திருப்பதாக பொய்யான கணக்கு காண்பித்து அரிசி, பருப்பு , எண்ணை, முட்டைகளை கடைகளில் விற்று அங்கன்வாடி மைய ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அறிய நுழைவாயில்களிலும், அரிசி ,பருப்பு இருப்பு வைக்கப்படும் ஸ்டோர் ரூம்களிலும், சிசிடிவி பொருத்தி கண்காணிக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

5 அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆட்சியருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தை தூண்டிய 5 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இப்படியே போனால் அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி காமிரா பொருத்தி விடுவார்களோ என்று அஞ்சிய ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர்

அங்கன்வாடி மையத்தில் சிசிடிவி காமிரா பொருத்துவதால் அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அசவுகரியமாக இருக்கும் என்று குற்றஞ்சாட்டி பெண் ஊழியர்கள் போர்க்குரல் எழுப்பினர். பாலூட்டும் தாய்மார்கள் எதற்கு ஸ்டோர் ரூம் செல்ல போகிறார்கள் ? என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சித்தலைவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் பூட்டப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கேட்டில் ஏறி போராட்டம் நடத்தும் அளவுக்கு ஊழியர்கள் உக்கிரமாகினர்

போராட்டம் இரவு தாண்டியும் நீண்டதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது 5 அங்கன்வாடி மையத்தில் மட்டும் பரிசோதனை முறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை சம்பந்தப்பட்ட இடத்தில் பணிக்கு சென்ற இரு தினங்கள் கடந்து பழைய பணியிடங்களுக்கு மாற்றம் செய்வதாகவும் உருதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments