உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறப்போகிறது - பிரதமர்
நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின விழாவில் பேசிய பிரதமர், இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி, பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய தண்டனை விதிகள் வரவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா தனது கடற்படைக் கொடியில் இருந்த அடிமை சின்னத்தை அகற்றியுள்ளதாகவும், டெல்லி இந்தியா கேட் பகுதியில், அந்நிய சக்தியின் பிரதிநிதி சிலை இருந்த இடத்தில் தற்போது நேதாஜி சுபாஷ் சிலை நம்மை உத்வேகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் காஷ்மீர் இடையே தடுப்பு சுவராக இருந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மக்கள் பயங்கரவாத நிழலில் இருந்து வெளியே வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறப்போவதாகவும், தேஜாஸ் போர் விமானங்கள் முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
Comments