இந்த பாட்டிய பார்த்தா வருமான வரி கட்டுற மாதிரியாப்பா இருக்கு..? உரிமைத் தொகை கொடுங்கப்பா.. திமுக எம்.எல். ஏ
காஞ்சிபுரத்தில் மூதாட்டி ஒருவருக்கு, வருமானவரி செலுத்துவதாக கூறி மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்ட நிலையில், இவரை பார்த்தால் வருமானவரி கட்டுபவர் போலவா ? இருக்கிறார் என்று அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்.எல்.ஏ எழிலரசன் பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க கேட்டுக் கொண்டார்
காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது தொகுதிக்குட்பட்ட கீழ்கதிர்பூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார், அப்போது அங்கு வந்த கிராமத்து பெண்கள் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒன்றுகூடி சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசனை சுற்றி நின்று எங்களுக்கு ஏன் மகளிர் உரிமை தொகையான மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை என ஒவ்வொருவராக கேள்வி எழுப்ப தொடங்கினர்
ஒரு கட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் எம்.எல்.ஏவை நோக்கி கூச்சலிட்டனர்
சட்டென்று கோபம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமாற்றினார்களே... மோடியிடம் போய் ஏன் கேட்கவில்லை அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே..? என எம்.எல்.ஏ ஆவேசமானார்
உடனே கூட்டத்திலிருந்து பெண்மணி ஒருவர் மோடி அவர்களை வர சொல்லுங்க நான் அவரிடம் கேட்கிறோம் நீங்கள் தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள் அதான் உங்களிடம் கேட்கிறோம் என்றனர்
கூட்டத்திலிருந்து மூதாட்டி ஒருவர் எனக்கு 1000 ரூபாய் வரவில்லை என கூறினார், என்ன காரணம் என கேட்டதற்கு வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளதாக குறுஞ்செய்தி வந்ததாக கூறினார். உடனே கோபம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் , அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலரிடம் இவர்களைப் பார்த்தால் வருமான வரி கட்டுகிற மாதிரியா உள்ளதா ? ஏன் இதனை சரியாக ஆய்வு செய்ய மாட்டீர்களா? எனவும் ஆவேசமானதோடு, உங்கள் மீது நிர்வாக ரீதியாக பணியிட நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அரசு அலுவலர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் சம்பாதித்தால் மட்டும் போதுமா ? மக்கள் நலன் குறித்து அக்கறை வேண்டாமா? அரசு அலுவலர்கள் செய்யும் தவறால் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் பொது மக்களிடம் பதில் கூறும் நிலையை ஏற்படுத்துவதா ? என அதிகாரிகளை நோக்கி சரமரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் மகளிர் உரிமைத்தொகை வேண்டும் என கேட்டவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறி எம்.எல்.ஏ எழிலரசனை பெண்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்
Comments