பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தி.மு.க - பாஜகவினர் மோதல்.. டெண்டரை ரத்து செய்த ஆட்சியர்.. கனிமவளத்துறை அலுவலகத்தில் பொருட்கள் சூறை

0 2008

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு இன்று ஏலம் நடைபெற இருந்த நிலையில், விண்ணப்பத்தை பெட்டியில் போட வந்த பாஜகவினரை திமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஏலத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர், கல்பாடி வடக்கு, செங்குணம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம் மற்றும் பாடாலூர் கிழக்கு ஆகிய கிராமங்களில் 31 இடங்களில் உள்ள குவாரிகளில் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்க மறைமுக ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் நேற்று வழங்கப்பட்டது.

ஒவ்வொரு குவாரிக்கும் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்கள் மறைமுகமாக ஏலத்திற்கான விண்ணப்பத்தினை, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல்தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு வந்தனர்.

டெண்டர் பெட்டி இன்று திறக்கப்பட இருந்த நிலையில், கவுல்பாளையத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக பிரமுகரான கலைச்செல்வன் அவரது சகோரதர் முருகேசன் பெயரில் கல்குவாரியை ஏலம் எடுப்பதற்கான டெண்டர் விண்ணப்பத்துடன் வந்துள்ளார். அவர் சார்பில் வேலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் முருகேசன் டெண்டர் விண்ணப்பத்தை பெட்டியில் போட வந்த போது, திமுகவினர் மற்றும் ஒரு கும்பல் அவரை வழிமறித்து டெண்டரை போட விடாமல் தடுத்தனர். இதையும் மீறி அவர்கள் துணை இயக்குனர் சுரங்கத்துறை அலுவலகத்தில் புகுந்து டென்டர் விண்ணப்பத்தினை போட முற்பட்ட போது அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை தடுத்த கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகியோரையும் ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர். பாதுகாப்புப் பணியிலிருந்த டிஎஸ்பி. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கி சட்டையை பிடித்து இழுத்து கிழித்து தாக்கினர். இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கற்பகம், கனிமவள அலுவலகத்திற்குச் சென்று டெண்டர் போட வந்தவர்கள் தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டுமென எச்சரித்தார். மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் போலீசாரை தாக்கிய கும்பல், அவர்களிடமிருந்து செல்போன்களைப் பறித்து கீழே தூக்கி வீசி உடைத்தெறிந்தனர்.

இதனை அறிந்து வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று அங்கே ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை நீண்ட நேரம் போராடி வெளியேற்றினர்.

இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இன்று நடைபெற இருந்த 31 கல்குவாரிக்கான ஏலத்தினை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments