டிக்... டிக்... டிக்... பட்டாசு to டிபன்பாக்ஸ் பாம்.. இது தான் அந்த ரகசியம்..! விபரீதத்தின் முகவரி இவர் தான்

0 2275

கேரள ஜெபக்கூட குண்டு வெடிப்பிற்கு காரணமான டொமினிக் மார்ட்டின் , எப்படி ரிமோட் வெடிகுண்டை தயார் செய்து கூட்ட அரங்கில் வெடிக்கச்செய்தார் என்பதை கேரள போலீசார் விவரித்துள்ளனர். பட்டாசு மூலம் பாம் செய்த விபரீதத்தின் முகவரி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

2000 ஆயிரம் பேர் இருந்த ஜெபகூட்டத்திற்குள் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டின் இவர் தான்..!

3 பேரை பலிகொண்ட கேரள களமசேரி ஜெபக்கூட்டத்தில் டொமினிக் மார்ட்டின் எந்த நேரத்தில் எப்படி குண்டு வைத்தார் ? அதை எப்படி வெடிக்கச் செய்தார் ? என்ற விபரங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, திருப்புந்நித்துறையில் உள்ள பட்டாசு கடையிலிருந்து அதிக சத்தத்துடன் வெடிக்கும் 50 வெடி குண்டு பட்டாசுகளையும், கொச்சியின் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் இருந்து ஏழு தவணையாக 8 லிட்டர் பெட்ரோலையும் வாங்கிய டொமினிக், ஒரு கடையிலிருந்து நான்கு ரிமோட்டுகள், ஆறு பேட்டரி செல்களையும் எல் இ டி பல்புகளை வாங்கி , இவற்றை ஆலுவா அருகே அத்தாணி பகுதியில் அமைந்துள்ள பூர்வீக வீட்டில் மறைத்து வைத்ததாக தெரிகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 5 மணிக்கு குடும்பத்தோடு வசிக்கும் வாடகை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, 5. 40 மணிக்கு பூர்வீக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பட்டாசுகளில் இருந்து வெடிமருந்தை தனியாக பிரித்து மற்ற பொருட்களை ஒருங்கிணைத்து காலை 6.30 மணிக்கு டிபன்பாக்ஸ் வெடிகுண்டு தயார் செய்ததாக கூறப்படுகின்றது. ஜெபக்கூட்டத்துக்கு வருவோர் வழக்கமாக தங்களுக்கான உணவை வீட்டிலிருந்தே டிஃப்ன் பாக்ஸில் கொண்டு வந்து விடுவார்கள் என்பதால் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்று டிபன் பாக்ஸ் குண்டை அவர் தயார் செய்ததாக கூறப்படுகின்றது

அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு ஜெபக்கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு சென்ற அவர், அங்கு ஒரு சிலரே காணப்பட்ட நிலையில், அரங்கின் மையப்பகுதில் ஒரு நாற்காலிக்கு அடிப்பகுதியில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை வைத்த பின்பு வெளியே சென்றுள்ளார். 8. 30 மணிக்கு மீண்டும் உள்ளே சென்று வெடிகுண்டின் பேட்டரியை ஆன் செய்துள்ளார். டொமினிக் மார்ட்டின் நினைத்ததுபோலவே, சபையில் இருந்தவர்களும் அவர் கொண்டுவந்துள்ளது உணவு அடங்கிய டிபன் பாக்ஸ்தான் என எண்ணியதாக தெரிகிறது. பின்னர் 9. 40 மணிக்கு ஜெபக்கூட்ட அரங்கில் சபையினர் கூட்டம் அதிகரித்த நிலையில் அரங்கின் பின் பகுதியிலிருந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க செய்தார்.

பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு 10. 45 மணிக்கு கொரட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிய டொமினிக் அங்கிருந்து சமூக வலைத்தள பக்கத்தில் நேரலை வீடியோ மூலம் தன்னால் நிறைவேற்றப்பட்ட திட்டம் மற்றும் அதற்கான காரணம் குறித்து விளக்கினார். 11. 15 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தி விட்டு, 11. 45 மணிக்கு கொடக்கரா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments