ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு.. தாக்குதல் நடத்தியது ஏன்? சபை உறுப்பினர் வாக்குமூலம்

0 2865

கேரளாவில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள், 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், குண்டு வைத்தது தான் என, சரணடைந்தவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கொச்சி அருகே உள்ள களமசேரியில் ஞாயிறன்று சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட ஜெபக்கூட்டத்தில் காலை சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து புகை மூட்டமும் தீயும் அப்பகுதியில் பரவியது.

நடந்தது என்ன என்பதை ஊகிப்பதற்குள் அங்கு எழுந்த தீயாலும், புகை மூட்டத்தாலும் சிறுவர்கள் முதியவர்கள் நிலைகுலைந்து பயந்து அலறியவாறே கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

ஜெபத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் கவச உடையோடு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள காவல்துறையின் தீவிரவாத தடுப்பு குழுவினரும், தேசிய புலனாய்வு முகமையும் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில்,ஜெபக்கூட்டத்தில் IED வகை குண்டு வெடித்துள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்ததோடு, குறைந்த தீவிரம் கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக மார்ட்டின் டொமினிக் என்பவர் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடையும் முன்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தான் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளார். 16 ஆண்டுகளாக ஜெபக்கூட்டம் நடத்திய சபையின் விசுவாசியாக இருந்ததாகவும் பின்னர் அந்த சபையின் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.

சபையினர் தேச துரோக கருத்துக்களை பேசி வருவதாகவும், வெள்ளத்தின் போது கூட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்யாமல் சபையினரை மட்டுமே தேடிச் சென்று உதவி செய்ததாகவும் மார்ட்டின் டொமினிக் கூறியுள்ளார். இதனை கண்டித்தும் கேட்காததால் வெடிகுண்டு வைத்ததாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மார்ட்டின் டொமினிக்.

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி கண்டுபிடித்து 6 மாதமாக பயிற்சி எடுத்ததாக போலீசாரிடம் மார்ட்டின் டொமினிக் வாக்குமூலம் அளித்துள்ளார். மார்ட்டின் டொமினிக் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான உபா உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments