ஒரு பொலிரோ காரும் அதுக்கு மேல 26 பேரும்.. அலப்பறைய கிளப்புறாய்ங்க..! அமைதி காத்த போலீசார்
மருது பாண்டியர் குருபூஜைக்கு சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்று போலீசார் கூறிய நிலையில் ஒரே பொலிரோ காரின் மீது 26 பேர் தொற்றிக் கொண்டும் குதித்தபடியும் சென்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 222 ஆவது குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று பங்கேற்றனர்.
குருபூஜையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொந்த வாகனங்களில் மட்டுமே மருது பாண்டியர் குருபூஜை விழாவுக்கு செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சொந்த வாகனங்களில் வந்தவர்கள் அரசு விதிமுறைகளை மீறி வாகனங்களில் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் அலப்பறை செய்தனர்.
சாலையில் அபாயகரமான முறையில் தீப்பந்தம் பிடித்தும் அட்ராசிட்டி செய்தனர்.
பொலிரோ கார் ஒன்றில் பேனட்டில் 3 பேர், காருக்கு மேல் 13 பேர், இருபுறமும் 4 பேர் காருக்கு பின்னால் 3 பேர் காருக்குள் 3 பேர் என்று மொத்தம் 26 பேர் குதியாட்டம் போட்டபடி சென்றனர். அவர்களை மறித்த இரு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அலப்பறையை கிளப்பிய வாகன ஓட்டி ஒருவரை பிடித்து போலீசார் எச்சரித்த நிலையில் அவருடன் வந்தவர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் அதையும் மீறி சில இளைஞர்கள் கார்களில் ஆட்டம் பாட்டத்துடன் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Comments