வெளியிடப்பட்ட வீடியோக்கள்..! ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு வரிக்கு வரி பதில் தந்த காவல்துறை..!!

0 1796

ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என காவல்துறையினர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர், காவல் துறை உயரதிகாரிகள். அப்போது,
பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத், நந்தனத்தில் இருந்து ராஜ் பவன் வரை தனியாக கையில் ஒரு பையுடன் நடந்து சென்ற சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் வெளியிட்டார்.

கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்குள் பெட்ரோல் குண்டை வீசவில்லை என்றும் சர்தார்பட்டேல் சாலையிலிருந்து வீசியதாகவும் கூறிய காவல் ஆணையர், ஆளுநர் மாளிகை தரப்பில் கூறியது போல், கருக்கா வினோத் ராஜ்பவனுக்குள் உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சிறையிலிருந்து விடுதலையான போது கருக்கா வினோத் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் சேர்ந்து வந்தாக வெளியாக வீடியோ குறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர், இரு தரப்பிற்கும் தொடர்பில்லை என்றார்.

அப்போது உடனிருந்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கருக்கா வினோத்தின் அரசியல் தொடர்பு குறித்து போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்று கூறினார்.

ஆளுநருக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை எந்த தருணத்திலும் குறைக்கவில்லை என தெரிவித்தார் டி.ஜி.பி.

2022-இல் மயிலாடுதுறையில் ஆளுநர் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டது முற்றிலும் தவறான தகவல் என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments