ராஜ்பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு..! கைவரிசை காட்டிய ரவுடி!!

0 1920

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி சிறைக்கு சென்ற ரவுடி, ரிலீசான 3 வது நாளில் மீண்டும் விபரீத தாக்குதல் நடத்தி கைதாகியுள்ளான்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவன் பெட்ரோல் குண்டை வீசினான். வாசலில் விழுந்த பாட்டில் உடைந்து சிதறியது.

இங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உஷாரான நிலையில் அந்த பாட்டில் ஹைவே ரிசர்ச் சென்டரில் இருந்து வந்து விழுந்ததை கவனித்த காவலர்கள் உடனடியாக பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமியை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது மற்றொரு பெட்ரோல் பாட்டில் ரவுடியின் காலடியிலேயே விழுந்து உடைந்த நிலையில், அவனது கையில் மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் தீ பற்ற வைக்காமல் இருந்ததை கண்டு அவற்றை போலீசார் கைப்பற்றினர்

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் , எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்த போலீசார் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்

போலீசாரின் விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கருக்கா வினோத் என்பதும் தேனாம்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளியான இவன் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பும் இதே போல பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.

3 தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த கருக்கா வினோத் , தங்கள் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் இருந்து பெட்ரோலை பாட்டில்களில் நிரப்பி 4 பெட்ரோல் குண்டுகளை தயாரித்து ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்த வந்ததாகவும், முதல் குண்டு வாசலில் விழுந்து சிதறியதுமே போலீசார் மடக்கி பிடித்து விட்டதாகவும், யாரும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா.

காலையில் மது அருந்திவிட்டு, நிதானம் இல்லாமல் தான் இந்த செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என விரிவான விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்

இதற்கிடையே ஆளுநர் மாளிகை அதிகாரி செங்குட்டுவன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் குண்டுகளை கையில் ஏந்திய விஷமிகள் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாகவும், 2 பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments